

கும்மிடிப்பூண்டி அருகே செவிலி யரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், கிறிஸ்தவ மதபோதகர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி கவரப்பேட்டை அருகே எ.என்.குப்பத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், கும்மிடிப்பூண்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் அண்மையில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், ‘எனது பகுதியைச் சேர்ந்தவர் பிரபுதாஸ் (எ) தினகரன் (28). முதுநிலை பட்டதாரியான இவர், எ.என்.குப்பத்தில் உள்ள ஒரு ஆலயத்தில் மதபோதகராக பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனக்கு மேற்படிப்பு சொல்லி தருவதாக கூறி பழவேற்காடு அழைத்துச் சென்றார். அங்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். நான் குடித்து விட்டு மயங்கி விட்டேன்.
பிறகு, அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். நான் கேட்டதற்கு என்னை கொலை செய்து விடுவதாக அவர் மிரட்டினார். பின்னர் அவர் செல்போனில் ஒரு நாள் தொடர்பு கொண்டார். இந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லாததால் உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறினார். எனக்கு மோதிரம் வாங்கி கொடுத்தார்.
பின்னர், செங்குன்றத்துக்கு அழைத்துச் சென்று மீண்டும் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் என்னை திருமணம் செய்ய சொன்னபோது அவர் மறுத்துவிட்டார். இதுகுறித்து நான் பிரபுதாஸின் அக்காவிடம் கூறினேன். அதற்கு அவர் ரூபாய் ஒரு லட்சமும், 50 பவுன் நகையும் கொண்டு வா என கூறினார்’ என்று அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. பெண் செவிலியர் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் போலீசார், பிரபுதாஸை நேற்று கைது செய்தனர்.