

அண்ணாவின் 48-வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சமாதியில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னாள் முதல்வரும், திமுக நிறுவனருமான அண்ணாவின் 48-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை யொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதியில் நேற்று காலை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, தமிழக அமைச்சர்கள் ஆகியோர் மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, எம்ஜிஆர் சமாதி மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தினர்.
ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார். அப்போது, மக் களவை துணைத்தலைவர் மு.தம்பி துரை, அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், பண்ருட்டி ராமச் சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
திமுக மரியாதை
முன்னதாக, காலை 7.30 மணிக்கு அண்ணா சமாதியில் திமுக சார்பில் மரியாதை செலுத்தப் பட்டது. இதை முன்னிட்டு, திமுக வினர் அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமை யில், சேப்பாக்கத்தில் இருந்து அமைதி ஊர்வலமாக அண்ணா சமாதிக்கு சென்றனர். அங்கு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். திமுகவின் முதன்மை செய லாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ராஜா, எம்எல்ஏக்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணி யன் மற்றும் ஏராளமானோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். உடன் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள். படங்கள்: க.ஸ்ரீபரத்
திமுக, அதிமுகவைத் தொடர்ந்து திராவிடர் கழகம் சார்பில், அதன் தலைவர் கி.வீர மணி அண்ணா சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மதிமுக சார்பில், அண்ணாசாலை யில் இருந்து ஊர்வலமாக அண்ணா சமாதி நோக்கி சென்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர், சமாதியில் மரியாதை செலுத்தினர்.
தேமுதிக சார்பில், அக்கட்சி யின் நிறுவன தலைவர் விஜயகாந்த், கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணா திருவுருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் தேமுதிக மகளிர் அணியினர், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் தலைவர் சேதுராமன், சமத்துவ கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட பலர் அண்ணாவுக்கு மரியாதை செலுத்தினர்.
நாடாளுமன்றத்தில் உள்ள அண்ணா சிலைக்கு, அதிமுக மக்களவை குழு தலைவர் பி.வேணுகோபால், மாநிலங் களவை குழு தலைவர் நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட எம்பிக்கள் மரியாதை செலுத்தினர்.
சமபந்தி விருந்து
அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்துகள் நடத்தப்பட்டன. சென்னை, திருவான்மியூர் மருந் தீஸ்வரர் கோயிலில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று, பொது மக்களுடன் சமபந்தி விருந்திலும் கலந்து கொண்டார்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நுங்கம்பாக்கம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, கே.கே.நகர் சக்தி விநாயகர் கோயிலில் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காளிகாம்பாள் கோயி லில் அமைச்சர் பி.தங்கமணி, அமைந்தரை ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் அமைச்சர் பால கிருஷ்ண ரெட்டியுடன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவும், விருந்தில் பங்கேற்றனர்.