Published : 07 Feb 2015 08:45 AM
Last Updated : 07 Feb 2015 08:45 AM

சொத்து வரி செலுத்தாத நட்சத்திர ஓட்டல்கள் முன்பு திருநங்கைகளை நடனமாட வைத்து வரி வசூல்: சென்னை மாநகராட்சி ஒரே நாளில் ரூ.1.5 கோடி வசூல்

சொத்துவரி செலுத்தாத நட்சத்திர ஓட்டல்கள் முன்பு திருநங்கைகளை நடனமாட வைத்து சென்னை மாநகராட்சி வரி வசூலித்தது. இதன் மூலம் ஒரே நாளில் ரூ.1.5 கோடி வரி வசூல் செய்யப்பட்டது.

இது குறித்து அடையார் மண்டல துணை வருவாய் அதிகாரி தமிழ் கூறியதாவது:

சென்னை மாநகர நகராட்சி சட்டம் (1919) பிரிவு 104-ன் படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15, அக்டோபர் 15 ஆகிய தேதிகளில் வரி செலுத்த வேண்டும். ஆனால் அக்டோபர் மாதம் 15-ம் தேதி கட்டியிருக்க வேண்டிய வரியை பல நிறுவனங்கள் கட்டாமல் உள்ளன. இதில் ஓட்டல் லீலா பேலஸ் ரூ.82 லட்சமும், ஓட்டல் ஹில்டன் ரூ.33.9 லட்சமும் வரி பாக்கி வைத்திருந்தன. இதே போன்று, மல்லிகா இண்டஸ்ட்ரீஸ், சோமேஸ்வரா பிரமோட்டர்ஸ், மெக்ரனெட், ஓட்டல் செக்கர்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வரி பாக்கி வைத்திருந்தன.

மும்பை மாநகராட்சியில் வரி கட்டாத நிறுவனங்கள் முன்பு திருநங்கைகளை நடனமாட வைத்து வரி வசூலிப்பது வழக்கமாக உள்ளது. மாநகராட்சி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் தண்டோரா அடிக்க, திருநங்கைகள் நடனமாடுவர்.சென்னையிலும் இது போல் செய்யலாமே என்று யோசித்தோம். எனவே, அதிக தொகை நிலுவை கொண்ட, வரி செலுத்த மறுக்கும் நிறுவனங்கள் முன் திருநங்கைகளை நடனமாட வைத்தோம். அதற்கு பலன் கிடைத் துள்ளது. இதனால் ஒரே நாளில் ரூ.1.5 கோடி வசூலாகியுள்ளது. அடையார் மண்டலத்தில் இதுவரை ரூ. 62 கோடி வசூலாகியுள்ளது. மேலும் சுமார் ரூ. 13 கோடி வசூல் செய்யப்படவுள்ளது என்றார்.

இது குறித்து லீலா பேலஸ் பொது மேலாளர் செங்கப்பா கூறியதா வது: வரி செலுத்த மார்ச் மாத இறுதி வரை அவகாசம் இருக்கிறது. ஆனால், மாநகராட்சி அதிகாரி கள் அவசரப்படுத்தி, அச்சுறுத்தி இப்போதே வரி வசூலிக்கின்ற னர். கொடுக்கப்பட்ட அவகாசத்துக் குள் வரி கட்டவில்லை என்றால் சொத்துகளுக்கு மாநகராட்சி சீல் வைக்க முடியும். அப்படி இருக்கும்போது அவர்கள் ஏன் அதை செய்யவில்லை? என்றார்

பிஹாரில் அறிமுகமான திட்டம்!

ஆர்.ஷபிமுன்னா

‘அடி கும்மா! அடி ஜும்மா!‘ என கைகளில் கும்மியடித்தபடி, கடைதெருக்களில் ஜாலியாகக் கிளம்பிய திருநங்கைகள் முதன் முதலாக பிஹாரில் பாட்னா மாநகராட்சிக்காக வரி வசூல் செய்தனர்.

லாலு பிரசாத் யாதவ், பிஹாரில் ஆட்சியில் இருந்தபோது ஆசிரி யர்கள் உட்பட பல அரசு பணி யாளர்களுக்கு வருடக் கணக்கில் சம்பளம் வழங்கப்படவில்லை. மாநில அரசின் குடிநீர் வரி, சொத்து வரி போன்றவை பல வருடங்க ளாக முறையாக வசூலாகாமல் இருந்தது. பாட்னா நகரில் மட்டும் சுமார் 5 லட்சம் பேர் சரியாக வரி செலுத்தாமல், சுமார் ரூ. 70 கோடி வரை பாக்கி இருந்தது.

இதனால் பிஹாரின் புதிய முதல்வராகப் பதவியேற்றிருந்த நிதீஷ்குமார் வரி பாக்கியை அதிரடியாக வசூல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.

பாட்னா மாநகராட்சி ஆணையர் அத்துல் பிரசாத் மட்டும் மிகவும் வித்தியாசமான முறையில் திருநங்கைகளை வைத்து வசூல் செய்யும் யோசனை செய்தார்.

அதன்படி பேண்டு வாத்தியம் ஸ்பீக்கர் மைக் சகிதமாக திருநங்கைகளை களத்தில் இறக்க, அலறி அடித்து கொண்டு மக்கள் தங்கள் வரி பாக்கியை கட்டத் தொடங்கினர்.

‘மரியாதையைக் காப்பாத்திக் கோங்க! மானம் போகாம பாத்துக் கோங்க! வரி பாக்கி கட்டலேனா வீடு ஏலம் போயிடும்! அடி கும்மா! அடி ஜும்மா!‘ என மைக்கில் சரளமாக பேசியபடி திருநங்கை கள் கும்மியடித்தனர்.

ஒவ்வொரு கடைகளின் முன்பும் சென்று வளைந்து ஆட்டம் போட, உடனடியாக அதே இடத்தில் வரிபாக்கி வசூலானது. ஏமாற்றி அங்கிருந்து ஓட முயலும் சிலரது கடைகளின் முன்பு, திருநங்கைகள் ஓலமிட்டபடி ஒப்பாரி வைக்க, வரி பாக்கி உடனடியாக வசூலானது.

இந்த வசூலின் போது ரசீது எழுதி பணத்தை வாங்க அதிகாரி களும், திருநங்கைகளை யாரும் தாக்கி விடாதபடி பாதுகாப்புக்கு போலீஸாரும் உடன் சென்றனர்.

இவ்வாறு ஒரே நாளில் சுமார் ரூ. 5 லட்சம் வரை ஒரு பக்கம் வரி வசூலாக, மறுபக்கம் அதற்கு எதிர்ப்பும் கிளம்பி இருந்தது. எனவே, 2 நாள் மட்டுமே தொடர்ந்த திருநங்கைகள் வசூல், நிறுத்தப்பட்டது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x