சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை அதிகாரிகளுக்கு ஒளிபரப்புவதா?- பேரவைத் தலைவருடன் திமுக கடும் வாக்குவாதம்: திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் வெளிநடப்பு

சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை அதிகாரிகளுக்கு ஒளிபரப்புவதா?- பேரவைத் தலைவருடன் திமுக கடும் வாக்குவாதம்: திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் வெளிநடப்பு
Updated on
2 min read

சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் ஒளி பரப்பு தொடர்பான விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதைக் கண்டித்து, திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் நேற்று மின்சாரம், மதுவிலக்கு, ஆயத் தீர்வை ஆகிய துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் ரங்கநாதன் பேசினார். அப்போது நடந்த விவாதம்:

துரைமுருகன் (திமுக):

அவை யில் மின் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது. ஆனால், துறை தொடர்பான அதிகாரிகள் யாருமே இங்கு இல்லை. இது அவையை அவமதிப்பது போலாகும்.

பேரவைத் தலைவர் பி.தனபால்:

அதிகாரிகள், அமைச்சரவை அறையில் உள்ளனர்.

துரைமுருகன்:

அவர்கள் அனைவரையும் இங்கு வரச் சொல்லுங்கள்.

மின்துறை அமைச்சர் தங்கமணி:

துறை அதிகாரிகள் அருகில்தான் உள்ளனர். முந்தைய 5 ஆண்டு களில் 10 ஆயிரத்து 11 மெகாவாட் உற்பத்தி திறன் என்ன ஆனது என்று கேட்டேன். அதற்கு பதி லளிக்காமல் திசை திருப்பப் பார்க்கிறார்கள்.

பேரவை தலைவர்:

ஏன் டென் ஷன் ஆகிறீர்கள். அமைச்சர் அமைதியாக பதிலளித்து வரு கிறார். இது ஒரு விஷயமா? உட்காருங்கள்.

அப்போது எதிர்க்கட்சித் தலை வர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேச வாய்ப்பு கேட்டார். தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்றனர்.

பேரவைத் தலைவர்:

பேரவை வளாகம் என் ஆளுகைக்கு உட் பட்டது. உறுப்பினர்கள் பேசுவதை அதிகாரிகள் குறிப்பெடுப்பதற்கு உரிய ஏற்பாடுகளை செய்துள் ளேன். நிறைய அதிகாரிகள் இருப் பதால் அவர்கள் கேபினட் அறை யில் உள்ளனர். அவர்களுக்கு கேபிள் டிவி வசதிகள் செய்யப் பட்டுள்ளன. அவர்கள், இங்கு நடப்பதை பார்த்து அமைச்சர் களுக்கு பதில் தயாரித்து அளித்து வருகின்றனர். இது என் அதிகாரத் துக்குட்பட்டது.தவறு இல்லை.

அப்போது துரைமுருகன் எழுந்து பேச வாய்ப்பு கேட் டார். பேரவைத் தலைவர் மறுத்துவிட்டார்.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டா லின்:

துணைத் தலைவர் துரை முருகன் சுட்டிக்காட்டியதும் அதி காரிகள் உள்ளே வந்து அமர்ந்து விட்டனர். ஆனால், நாங்கள் திசை திருப்ப முயல்வதாக அமைச்சர் கூறுவது கண்டிக்கத்தக்கது.

பேரவைத் தலைவர்:

அமைச்சர் பதில்தான் அளித்தார்.

துரைமுருகன்:

அவையில் உங்களுக்குதான் அதிகாரம் உள்ளது. ஆனால், டிவி வைத்து அவை நடவடிக்கைகளை ஒளிபரப்புவது குற்றம்.

பேரவைத் தலைவர்:

நான் அனுமதி அளித்துள்ளேன். அது என் உரிமை. பேரவைத் தலைவருக்கான அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது. நான் அனுமதி அளித்ததை கேள்வி கேட்க முடியாது. இதில் தவறு ஏதும் இல்லை.

தொடர்ந்து திமுக உறுப்பினர் கள் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவை முன்னவர் ஓ.பன்னீர் செல்வம்:

பேரவைத் தலைவ ருக்கு தனி அதிகாரம் உண்டு. அதன்படிதான் அனுமதி அளித் துள்ளார். அதில் தலையிடக் கூடாது. கேள்வி எழுப்பவும் யாருக்கும் உரிமை இல்லை.

அப்போது, பேரவை நிகழ்ச்சி கள் ஒளிபரப்பு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் பேசியதை நீதிமன்றத்தில் உள்ள வழக்கு தொடர்பாக பேசியதாக கூறி, அவைக்குறிப்பில் இருந்து நீக்கி பேரவைத் தலைவர் உத்தரவிட் டார். இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பேரவைத் தலைவர்:

என் அதிகாரத்தை யாரும் மறுக்க முடியாது. இனி இது தொடர்பாக யாரும் பேசவேண்டாம்.

மு.க.ஸ்டாலின்:

நான் பேசியது நீதிமன்ற வழக்கை களங்கப்படுத்தும் வகையில் இல்லை. அதை நீக்குவது முறையாகாது.

ஓ.பன்னீர்செல்வம்:

வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது அதைப்பற்றி பேசக்கூடாது.

மு.க,ஸ்டாலின்:

நீதிமன்றத்தில் வழக்கு உள்ளபோது பேரவைத் தலைவர் மட்டும், நீதி மன்றத்தை மீறி இதை அனுமதிக்கலாமா?

பேரவைத் தலைவர்:

நீதி மன்றத்துக்கு தனி அதிகாரம் உள்ளது. சட்டப்பேரவைக்கு தனி அதிகாரம் உள்ளது. பேரவைத் தலைவருக்கு தனி சிறப்பு அதிகாரங்கள் உள்ளன. அதன்படி ஏற்பாடு செய்துள்ளேன். இதை இத்துடன் விட்டுவிடுங்கள்

அப்போது துரைமுருகன் எழுந்து பேச முயன்றார்.

பேரவைத் தலைவர்:

துரை முருகன் காலையில் இருந்தே ஏதோ டென்ஷனில் இருக்கிறார்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

தொடர்ந்து, திமுக உறுப்பினர் ரங்கநாதன் பேச அனுமதிக்கப்பட் டார். அவர் பேசி முடித்ததும், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எழுந்து, தான் பேசியதை அவைக்குறிப்பில் மீண்டும் சேர்க்க வேண்டும் என கோரினார். இதற்கு பேரவைத் தலைவர் மறுப்பு தெரிவித்ததால், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய் தனர். அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

பேரவைக்கு வெளியில் நிருபர் களிடம் மு.க.ஸ்டாலின் கூறும் போது, ‘‘அவை நிகழ்ச்சிகளை தனிப்பட்ட முறையில் டிவி வைத்து அதிகாரிகளுக்கு ஒளிபரப்புவது எந்த விதத்தில் நியாயம் என துணைத் தலைவர் கேட்டார். நாடாளுமன்றத்தில் நடப்பதை நேரலையில் பார்க்கிறோம். அதுபோல, இந்த அவையில் நடப்பதை பொதுமக்கள் பார்க்க வசதி செய்து தரவேண்டும் என கோரிக்கை வைத்தேன். அது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப் படுகிறது. இதை கண்டிக்கும் வகையில் வெளிநடப்பு செய் துள்ளோம்’’ என்றார்.

பேரவைத் தலைவருக்கான அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது. நான் அனுமதி அளித்ததை கேள்வி கேட்க முடியாது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in