Published : 29 May 2017 09:09 AM
Last Updated : 29 May 2017 09:09 AM

புகார்தாரரை போலீஸார் அலைக்கழிக்க கூடாது: காவல் நிலையத்துக்கு வருபவர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுரை

புகார்தாரரை அலைக்கழிக்காமல் காவல் நிலையத்துக்கு வருபவர் களிடம் போலீஸார் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுரை வழங்கியுள்ளார்.

சென்னையில் குற்றங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தினமும் ஆலோசனை வழங்கி வருகிறார். இந்நிலையில் பூக்கடை, கீழ்ப்பாக்கம், அடையார், அண்ணா நகர் உட்பட சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் வாராந்திர கவாத்து (ரோல்கால்) நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கூடுதல் காவல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், மற்றும் துணை ஆணையர்கள் உட்பட 5 ஆயிரம் போலீஸார் கலந்து கொண்டனர்.

எழும்பூர் ராஜரத்தினம் மைதா னத்தில் நடைபெற்ற கவாத்தில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வ நாதன் கலந்து கொண்டு காவலர் களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். நிகழ்ச்சியின் நிறைவில் பஞ்சாப் மாநில முன் னாள் டிஜிபி கே.பி.எஸ் கில் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத் தப்பட்டது.

நிகழ்ச்சியின்போது போலீ ஸாருக்கு அறிவுரை வழங்கி காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வ நாதன் பேசியதாவது:

நம்மை பிறர் எவ்வாறு மரியாதை யாக நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அதுபோல காவல் நிலையத்துக்கு வருபவர் களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். புகாரின் தன்மைக்கேற்ப மனு ரசீது (சிஎஸ்ஆர்) முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) வழங்கி விசாரிக்க வேண்டும். காவல் நிலைய எல்லையை காரணம் காட்டி அலைக்கழிக்க கூடாது. பெண்களை பெண் காவல் அதிகாரிகள் மூலம் மட்டுமே விசாரிக்க வேண்டும்.

வாகனத் தணிக்கையின் போது கனிவுடன் நடந்து கொள்ள வேண் டும். விதிமுறைகளை மீறுபவர் கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து விதிகள் அனைவருக்கும் ஒன்றே. காவலர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். காவலர்கள் மிடுக்காக சீருடை அணிய வேண்டும்.

அனைவரும் உடல்தகுதியை பணிக்காலம் முழுவதும் பராமரிக்க வேண்டும். வருடாந்திர உடல் பரிசோதனையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். ஓய்வு நேரத்தில் குடும்பம் மற்றும் குழந்தைகளின் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்ற வார்த்தையை உண்மையாக்க அனைவரும் பாடுபட வேண்டும் .

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர்கள் எஸ்.என்.சேஷசாயி, எம்.டி.கணேசமூர்த்தி, துணை ஆணையர் எஸ்.சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x