அங்கீகரிக்கப்படாத மனைகளுக்கு அடமானக் கடன்: அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு

அங்கீகரிக்கப்படாத மனைகளுக்கு அடமானக் கடன்: அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு
Updated on
2 min read

அங்கீகரிக்கப்படாத நிலங்களுக் கான அடமானக் கடன், ஜிஎஸ்டி மசோதா உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

டெல்லியில் பிரதமரை சந்தித்துவிட்டு நேற்று முன்தினம் இரவு சென்னை திரும்பிய முதல்வர் கே.பழனிசாமி, தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் வரும் ஜூன் மாதம் நடக்கும் என்று தெரிவித்தார். பேரவைக் கூட்டத்தை ஆளுநர் முடித்துவைத்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாக பேரவையை கூட்டும் முடிவுக்கு தமிழக அரசு வந்துள்ளது.

துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக் காக பேரவை கூட்டப்பட உள்ளது. அனைத்து மாநிலங்களும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பான மாநில சட்ட முன்வடிவை நிறைவேற்றி வருகின் றன. தமிழக அரசின் சார்பிலும் மாநில ஜிஎஸ்டி மசோதா, பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளது. மேலும், பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக டாஸ்மாக் வருவாய் தொடர்ந்து குறைந்து வருவதால், அரசுக்கு வருவாய் ஈட்டுவதற்கான மாற்று திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதன்படி அங்கீகாரமற்ற நிலங்கள் பதிவு, வழிகாட்டி மதிப்பு குறைப்பு, மணல் விற்பனை போன்றவற்றில் அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இது தொடர்பான முக்கிய சட்டத் திருத்தங்களும் சட்டப்பேரவையில் கொண்டுவரப்படும் என தெரிகிறது.

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் அமைச்சர்கள் தவிர, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித் துறை செயலாளர் கே.சண்முகம், வருவாய்த் துறை செயலாளர் பி.சந்திரமோகன், ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டம் 4.30 மணி வரை ஒன்றரை மணி நேரம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அங்கீகரிக்கப்படாத மனைகளுக்கு அடமானக் கடன் வழங்குவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. தனியார் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் அடமானக் கடன் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

சட்டப்பேரவையை கூட்டுவது, ஜிஎஸ்டி மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் நிறைவேற்றம், துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவா திக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறையிலும் வரி உயர்வு தொடர்பாக சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் கோரிக்கை களை விடுத்து வருகின்றனர். அது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

பத்திரப்பதிவுத் துறையில் மேற் கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள், நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பை குறைப்பது, ‘நீட்’ தேர்வு தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை, ரியல் எஸ்டேட் மசோ தாவை அமல்படுத்த புதிய வழிமுறைகள் போன்றவை தொடர்பாகவும் அமைச்சர்களுடன் முதல்வர் கே.பழனிசாமி விவாதித்து முக்கிய முடிவுகள் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமரிடம் அளிக்கப்பட்ட மனு வில் குறிப்பிடப்பட்டுள்ள சில சிறப்புத் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறுவது தொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆளுநர் - தலைமைச் செயலர் சந்திப்பு

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முடிந்த நிலையில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு நேற்று மாலை சென்றார். அவருடன் உயர்கல்வித் துறை செயலாளர் சுனில் பாலீவாலும் சென்றார்.

மாலை 5.30 மணிக்கு ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவை தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம், அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், பிரதமரை சந்தித்தபோது முதல்வர் அளித்த மனு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து விவாதித்ததாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், தமிழகத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர். இது தொடர்பாகவும் ஆளுநருடன் தலைமைச் செயலாளர் ஆலோசித்ததாக தெரிகிறது.

இதற்கிடையே, அமைச்சரவையில் மாற்றம் செய்ய முதல்வர் கே.பழனிசாமி விரும்புவதாகவும், சிலரது எதிர்ப்புகளை சமாளிக்கும் வகையில் அமைச்சர் பதவி அளிக்க முடிவு எடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்காக ஆளுநரை தலைமைச் செயலாளர் சந்தித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், ‘இது வழக்கமான சந்திப்புதான். வேறு முக்கிய விஷயங்கள் ஏதுமில்லை’ என ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in