

தமிழ்த் திரையுலகின் சக்ரவர்த்தியாக திகழ்ந்த கவிஞர் நா.முத்துகுமாரின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் திரையுலகத்திற்கும் பேரிழப்பு என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
நா.முத்துக்குமார் மறைவு குறித்து இன்று அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா.முத்துக்குமார் தன்னுடைய 41 வயதிலேயே மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு மறைந்தார் என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சியும், பெரும் துயரமும் அடைந்தேன்.
'தங்கமீன்கள்' படத்தில் இவர் எழுதிய ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலுக்கும், 'சைவம்' படத்தில் எழுதிய அழகே அழகே பாடலுக்கும் தேசிய விருது பெற்ற கவிஞர். 2005- ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதினையும், பல பிலிம்பேர் விருதுகளையும் பெற்று தமிழ்த் திரையுலகின் சக்ரவர்த்தியாக திகழ்ந்த கவிஞர் நா.முத்துகுமாரின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் திரையுலகத்திற்கும் பேரிழப்பு.
கவிஞர் நா.முத்துக்குமாரின் மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கல்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.