

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரை விடுதலை செய்யகோரி தமிழகம் முழுதும் ஆங்காங்கே போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது.
நாகப்பட்டிணத்தில் 55 வயது விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். விஷம் அருந்தி 3 நாட்களுக்குப் பிறகு இவர் நாகப்பட்டிணம் அரசு மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.
இன்று ஜாமீன் விசாரணையையொட்டி அதிமுக-வினருக்கு லேசான நம்பிக்கை ஏற்பட்டது. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்து விடும் என்று நம்பினர். ஆனால் வழக்கு 7ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதையடுத்து அவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சியது.
இந்நிலையில் மாநிலத் தலைநகர் சென்னை மற்றும் தமிழகத்தின் பிற இடங்களில் உண்ணாவிரதப் போராட்டங்கள் உட்பட பல்வேறு விதமான போராட்டங்களில் அதிமுக ஆதரவாளர்கள் ஈடுபட்டனர்.
திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் உண்ணா விரதம் மேற்கொண்டதையடுத்து, அதிமுக மாணவர்கள் அணியும் போராட்டத்தில் குதித்தது. கட்சித் தலைமை அலுவலகம் அருகே ஐடி பிரிவு மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தியது.
திருச்சிராப்பள்ளியில் அதிமுக ஆதரவாளர்கள் தொடர்ந்து 5வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்துள்ளனர். அண்ணாசிலை அருகே தங்கள் தலைவரை விடுவிக்கக் கோரி இவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
அதே போல் திருச்சி மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நாமக்கல்லில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அதிமுகவுடன் இணைந்த தொழிற்சங்கங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
பெங்களூரில் அதிமுக வழக்கறிஞர்களும் தர்ணாவில் ஈடுபட்டதாக செய்திகள் வந்துள்ளன. இன்றும் தென் தமிழகத்தின் பல பகுதிகளில் ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரும் போராட்டம் நடைபெற்றுள்ளது.
ஆங்காங்கே கடையடைப்புப் போராட்டங்களும் அதிகரித்து வருகின்றன. இந்தப் போராட்டங்களுக்கு எதிரான கண்டனக்குரல்களும் அரசியல் வட்டாரங்களிலும் சமூகத்தின் பல்வேறு தரப்புகளிலிருந்தும் எழுந்து வருகின்றன.
அதாவது ஜாமீன் அளிக்கக் கோரி இத்தகைய போராட்டங்கள் நீதித்துறைக்கு நெருக்கடி கொடுப்பதாகவும் அரசியல் நோக்கர்கள், விமர்சகர்கள் இதனை வர்ணிக்கின்றனர்.
இந்நிலையில் அக்டோபர் 7ஆம் தேதி வரை அதிமுக ஆதரவாளர்கள் காத்திருக்க வேண்டியதைத் தவிர வேறுவழியில்லை என்ற நிலையே ஏற்பட்டுள்ளது.