Published : 17 Mar 2017 04:05 PM
Last Updated : 17 Mar 2017 04:05 PM

அரசுப்பள்ளி மாணவரின் ரஷ்யா கனவு நனவாகுமா?

அரசுப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் ஜெயக்குமாருக்கு அப்பா இல்லை. அம்மா பட்டாசு ஆலைக் கூலித் தொழிலாளி. சொந்தங்கள் ஒவ்வொருவரும் வெடிவிபத்தில் இறக்க, என்ன செய்வதெனத் தெரியாமல் அவர் முடங்கவில்லை.

தொடர்கதையான வெடி விபத்தின் ஆபத்தை எப்படிப் போக்கலாம் என்று யோசித்தார். விருதுநகர், நாரணாபுரம் அரசுப்பள்ளியில் படிக்கும் ஜெயக்குமாருக்கு ஆசிரியர் கருணைதாஸ் ஊக்கம் அளித்தார்.

வந்தபின் பார்ப்பதை விட, வருமுன் காப்பதே சிறந்தது என உணர்ந்த மாணவர் ஜெயக்குமார், தானியங்கி தீயணைப்பான் இயந்திரத்தை உருவாக்கினார்.

இதுகுறித்துப் பேசிய ஆசிரியர் கருணைதாஸ், ''ஆலைகளில் வெடிபொருட்கள் கிடங்கு அறைகளில் இந்த இயந்திரத்தைப் பொருத்திவிட வேண்டும். வெடிபொருட்கள் தீப்பிடித்தால் ஏற்படும் வெப்பத்தினை உணரும் வகையில் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அறை வெப்பநிலையை விட சூடு அதிகமாகும்போது, அதை உணர்ந்து தானியங்கி இயந்திரம் வேலை செய்ய ஆரம்பிக்கும்.

உடனே அலாரம் ஒலிப்பதோடு, சிவப்பு விளக்கும் எரியும். அத்துடன் தீயை அணைப்பதற்காக மணல் தொட்டியும் இயந்திரத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள மின்விசிறியின் உதவியால் பரவும் நெருப்பின் மீது மணலை வீசி, தீயை அணைக்கலாம்.

இந்த செயல்திட்டம் பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டது. ஜெயக்குமாரை இஸ்ரோ விஞ்ஞானிகள் சிவசுப்ரமணியம், இங்கர்சால், உச்ச நீதிமன்ற நீதிபதி ஹெக்டே உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர். ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா நிறுவனம் இவருக்கு இளம் விஞ்ஞானி விருது வழங்கியுள்ளது. இதன்மூலம் பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

அதே நிறுவனம் மூலம் ஜெயக்குமாருக்கு ரஷ்யா செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அங்கே அறிவியல் மற்றும் விண்வெளி அறிவியல் தொடர்பான வழிகாட்டுதல் அவருக்கு அளிக்கப்படும். அங்கே விண்வெளி நிலையத்தில் ஒரு நாள் தங்கி ஆய்வு மேற்கொள்வார். ஏப்ரல் 24 முதல் மே 1 வரை 8 நாட்கள் கொண்ட இந்தப் பயணத்துக்கு ரூ.1.75 லட்சம் தேவைப்படுகிறது. இந்நிலையில் உதவும் உள்ளங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்'' என்கிறார்.

இது எதையும் அறியாமல் சிரித்த முகத்துடன் படித்துக்கொண்டிருக்கிறார் ஜெயக்குமார். நம்மிடம் பேசும்போது, ''எங்க ஊருல மாசத்துக்கு ரெண்டு வெடி விபத்தாவது நடந்துரும். எத்தனை லட்சம் குடுத்தாலும் ஒரு உயிர வாங்க முடியாதுல்ல? உயிரைக் காப்பாத்துறக்காண்டி ஏதாவது பண்ணலான்னு யோசிச்சேன்.

சாரோட சேர்ந்து, தீயணைப்பான கண்டுபிடிச்சேன். எல்லாரும் பாராட்டுறப்போ, ரொம்ப சந்தோஷமா இருக்கு. அம்மா இன்னும் நிறைய கண்டுபிடிக்கணும்னு சொனாங்க. சாலை விபத்தத் தடுக்கற கருவி பத்தி யோசிச்சிட்டு இருக்கேன். சீக்கிரத்திலேயே அதையும் பண்ணிடுவேன்'' என்பவரின் முகத்தில் ஒளிர்கிறது தன்னம்பிக்கையும், சாதிக்கும் ஆசையும்.

ஆசிரியர் கருணைதாஸின் தொடர்பு எண்: 9655816364


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x