

அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு 10 ஆண்டுகள் நிறைவு செய்த வாழ்நாள் சிறைக் கைதி களை விடுதலை செய்யாதது வருத்தம் அளிக்கிறது என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அரசியல மைப்பு சட்டத்தின் 161-வது விதியை பயன்படுத்தி 10 ஆண்டு களுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்துள்ள முஸ்லிம் சிறை வாசிகள் உட்பட அனைவரையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று மமக, தமுமுக உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், தமிழக அரசு அதனை செய்யாதது வருத்தம் அளித்துள்ளது.
இதுகுறித்து நான் சட்டப்பேரவையில் பலமுறை வலியுறுத்தி பேசியுள்ளேன். இந்த பிரச்சினை தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கை சுட்டிக் காட்டி அந்த வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு இதுகுறித்து பரிசீலிக் கப்படும் என தமிழக அரசு பலமுறை கூறியது. சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆகையால், அரசியலமைப்புச் சட்டம் 161-வது விதியைப் பயன்படுத்தி வாழ்நாள் சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கு தமிழக அரசுக்கு எந்தத் தடையும் இல்லை.
எனவே, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த முஸ்லிம் சிறைவாசிகள் உட்பட வாழ்நாள் சிறைவாசிகள் அனைவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். வேலூர் சிறையில் பேரறிவாளன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. எனவே, அவருக்கு உடனடியாக பரோல் வழங்க வேண்டும். மேலும், பேரறிவாளன், சாந்தன், முருகன் உட்பட ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை 161-வது பிரிவைப் பயன்படுத்தி விடுதலை செய்ய வேண்டும்.