

வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்ட திருத்தங்களை எதிர்த்து நீதிமன்ற புறக்கணிப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடும் தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்ய இந்திய பார் கவுன்சில் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர் சட்டத்தில் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள சட்ட திருத்தங்களை எதிர்த்து தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கடந்த ஜூன் 6-ம் தேதி சென்னையில் பேரணி நடத்தினர். அதன் தொடர்ச்சியாக மாநில அளவில் ஒருங்கிணைப்புக்குழு அமைத்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வரும் ஜூன் 11-ல் திருச்சியில் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே சில மாவட்டங்களில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கத்தினர், இந்த திருத்தங்களை வாபஸ் பெற வலியுறுத்தி நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். பார் கவுன்சில் தலைவர் செல்வம், இதுபோன்ற போராட்டங்களில் எந்த வழக்கறிஞரும் ஈடுபட வேண்டாம் எனவும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியே வழக்கறிஞர்களின் கோரிக்கை குறித்தும், புதிய திருத்தங்களின் படி தற்போதைக்கு எந்த நடவடிக்கையும் பாயாது எனவும் உறுதியளித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்திய பார் கவுன்சில் இணைச் செயலாளர் அசோக்குமார் பாண்டே தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு அனுப்பியுள்ள ஒரு உத்தரவில், ‘‘ வழக்கறிஞர் சட்டத்தில் உள்ள புதிய திருத்தங்களைக் களைவதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலிப்பதாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியே முன்வந்து செவிமடுத்துள்ளார். இந்த சூழலில், பிடிவாதமாக இதுதொடர்பாக போராட்டத்தை முன்னெடுக்கும் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்கத்தினர் யாராக இருந்தாலும் அவர்களை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும். இந்த நடவடிக்கையில் இந்திய பார் கவுன்சில் ஒருபோதும் குறுக்கே நிற்காது ’’ என அறிவுறுத்தியுள்ளார்.
இந்திய பார் கவுன்சிலின் இந்த உத்தரவு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் டி.செல்வத்திடம் கேட்டபோது, ‘‘வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்ட திருத்தங்களை எதிர்த்து நீதிமன்ற புறக்கணி்ப்பு, பேரணி, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது நோட்டீஸ் பிறப்பித்து இடைநீக்கம் செய்ய இந்திய பார் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.
ஆகவே நீதிமன்ற புறக்கணிப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள சங்கங்களுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்படும்’’ என்றார்.