Published : 19 Jun 2016 03:34 PM
Last Updated : 19 Jun 2016 03:34 PM

சினிமா தொழிலை காப்பாற்ற திருட்டு விசிடியை ஒழிக்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை

சினிமா தொழிலை காப்பாற்ற திருட்டு விசிடியை ஒழிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஏழை,எளிய நடுத்தர மக்களின் ஒரே பொழுதுபோக்கு சாதனம் சினிமா. ஆனால், சினிமா தொழில் நாளுக்குநாள் நலிவடைந்து கொண்டே வருகிறது. அந்தத் தொழிலை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வறுமையால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. சிலர் தற்கொலை வரை செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. இதற்கு திருட்டு விசிடிதான் முக்கிய காரணமாகும். திருட்டு விசிடி வீதிக்கு வீதி குடிசைத் தொழிலைபோல விற்பனை செய்யப்படுகிறது.

சினிமா தொழிலை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், கிராமங்களில் இருந்து சினிமா கனவுகளை சுமந்து சென்னை வரும் இளம் படைப்பாளிகள், சினிமா அதிபர்கள், இளம் நடிகர், நடிகைகள் என இத்துறையில் உள்ள அனைவரும் பாதுகாப்பற்ற அச்ச உணர்வில்தான் உள்ளனர்.

புதிதாக எடுக்கப்பட்ட படம் திரையரங்குக்கு வருவதற்கு முன்பே இணையதளத்தில் வெளியிடுவது அன்றாட நிகழ்வாகி வருகிறது. பிறர் உழைப்பை திருடி அதில் காசு பார்க்கும் கயவர்களை அரசின் காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதுதான் சினிமா தொழிலை காப்பாற்றும்.

இவ்வாறு அறிக்கையில் தமிழிசை கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x