Published : 18 Feb 2017 08:48 PM
Last Updated : 18 Feb 2017 08:48 PM

தமிழகத்திற்கு இது ஒரு மோசமான கருப்பு நாளாக அமைந்திருக்கிறது: ஸ்டாலின்

மறைமுக வாக்கு என்ற அடிப்படையில் வாக்கெடுப்பை நடத்தியிருந்தால் நிச்சயமாக இந்த ஆட்சி கவிழ்ந்திருக்கும். ஆனால், அதன்படி செய்ய சபாநாயகர் முன் வரவில்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று வெளியான அறிக்கை:

கழக செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று (18-02-2017) சட்டப்பேரவையில் நடைபெறவிருந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது மறைமுக வாக்கெடுப்பு நடத்தக்கோரி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அறவழியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகர் தனபால் உத்தரவின்படி, தளபதி மு.க.ஸ்டாலினை காவலர்கள் கடுமையாக தாக்கி, ஆடைகளை கிழித்து, வலுக்கட்டாயமாக, சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றினார்கள். அதேபோல 30 க்கும் மேற்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் காவலர்களால் தாக்கப்பட்டு ரத்த காயங்களுடனும், கிழிந்த உடைகளுடனும் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:

சட்டப்பேரவையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வர போதிய கால அவகாசம் அளித்து ஒத்திவைக்க வேண்டும் அல்லது மறைமுக வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று, திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருந்தோம். ஆனால் சபாநாயகர் அதை ஏற்கவில்லை. சபையை ஒத்தி வைத்துவிட்டு எங்களையெல்லாம் அவரது அறைக்கு அழைத்தார்கள். அப்போது அவர் வேண்டுமென்றே தன் சட்டையை கிழித்துக்கொண்டு, “உங்களுடைய உறுப்பினர்கள் இப்படி செய்திருக்கிறார்களே”, என்று என்னிடத்தில் நீலிக்கண்ணீர் வடித்தார். அப்போது, தெரிந்தோ, தெரியாமலோ தவறுகள் நடந்திருந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொண்டு, அதற்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மன்னிப்பு கேட்பதாக அவரிடத்தில் எடுத்துச் சொல்லி, அதன்பிறகு மன்றத்தை முறையாக நடத்தி, மறைமுக வாக்குச்சீட்டு மூலம் நம்பிக்கை

வாக்கெடுப்பு நடத்தும் வகையில் நீங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எவ்வளவோ மன்றாடினோம். ஆனால் அவர் கேட்கவில்லை.

பிறகு அவர் மீண்டும் சபைக்கு வந்தபோதும் தான் சொன்னதையே திரும்ப திரும்பச் சொன்னார். நாங்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் பிறகு நாங்கள் அங்கேயே உட்கார்ந்து எங்களுடைய அறப்போராட்டத்தை அவையில் நடத்தினோம். அவை மீண்டும் ஒத்தி வைக்கப்படுகிறது என்று சொல்லிவிட்டு சபாநாயகர் தனது இருக்கையை விட்டு எழுந்து, தனது அறைக்குச் சென்று விட்டார்.

ஆனால் திடீரென்று 2.30 மணியளவில் ஏறக்குறைய 500 க்கும் மேற்பட்ட காவலர்களை உள்ளே அனுப்பி, வலுக்கட்டாயமாக எங்களை வெளியேற்ற உத்தரவிட்டு, அசிஸ்டெண்ட் கமிஷனர் சேஷசாயி வெளியில் இருந்து அவைக்கு உள்ளே வந்து, அவரது உத்தரவின் அடிப்படையில், எங்களையெல்லாம் காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கியும், அடித்து, உதைத்து, ஷூ அணிந்த கால்களினால் மிதித்தும், எங்களுடைய சட்டைகளை எல்லாம் கிழித்தும், இந்த நிலையில் எங்களை வெளியேற்றி இருக்கிறார்கள். இந்த நிலையிலும் சபையை ஒத்தி வைக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு கடிதம் எழுதி கொடுத்து விட்டு வந்திருக்கிறோம். அதோடு, இங்கு நடந்த சம்பவங்களை எல்லாம் கவர்னரை நேரில் சந்தித்து விளக்கமாக எடுத்துச் சொல்வதற்கு இப்போது செல்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருடன் சட்டப்பேரவையில் இருந்து கிளம்பி நேராக கவர்னர் மாளிகைக்கு சென்ற ஸ்டாலின் அங்கு ஆளுநரிடம் சட்டப்பேரவையில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்கள் குறித்து முறைப்படி புகார் அளித்து, ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து, மு.க.ஸ்டாலின் தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் மெரினாவில் உள்ள காந்தி சிலை எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், மெரினாவில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய காவல்துறை முயற்சி செய்தது. ஆனால், காவல்துறை வாகனங்களை மறித்து கழகத்தினரும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பதற்றம் நிலவியது. இதற்கிடையில் மு.க.ஸ்டாலின் மற்றும் கழக சட்டமன்ற உறுப்பினர்களை காவல்துறை கைது செய்து, மயிலாப்பூர் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் அடைத்து பின்னர் விடுதலை செய்தனர்.

இதுகுறித்து ஸ்டாலின் கூறியதாவது:

தமிழகத்திற்கு இது ஒரு மோசமான ஒரு கருப்பு நாளாக அமைந்திருக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் பெற்றிருக்கக்கூடிய சசிகலா நடராஜன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது பினாமி ஆட்சியாக, ஒரு முகமூடி ஆட்சியாக எடப்பாடி பழனிசாமி என்று சொல்வதை விட எடுபுடி பழனிச்சாமி என்று சொன்னால் சரியாக பொருந்தக்கூடியவர், தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்கக்கூடிய வகையில் இன்று சட்டமன்றத்தில் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது.

வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னால் திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளை சார்ந்திருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களான நாங்கள் எல்லாம் சட்டமன்றத்தில் சபாநாயகரிடம் எடுத்து வைத்த கோரிக்கை என்னவென்றால், ஏறக்குறைய 10 நாட்களாக அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டு, இன்று சிறைக்கைதிகளை போல கொண்டு வந்து, சட்டமன்ற தேர்தலில் எப்படி ஓட்டுக்கு பணம் கொடுத்து ஆட்சிக்கு வந்தார்களோ, அதுபோலவே இன்று அதிகார மையத்தை தங்கள் கையில் தக்க வைத்துக் கொள்வதற்காக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கோடி, கோடியாக பல கோடி ரூபாய்களை கொடுத்தும், அவர்களை மிரட்டியும், அச்சுறுத்தியும் கொண்டு வந்து வாக்களிக்க வைத்திருக்கிறார்கள்.

மறைமுக வாக்கு என்ற அடிப்படையில் வாக்கெடுப்பை நடத்தியிருந்தால் நிச்சயமாக இந்த ஆட்சி கவிழ்ந்திருக்கும். ஆனால், அதன்படி செய்ய சபாநாயகர் முன் வரவில்லை. ஆகவே, இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்கள் முடிவெடுக்க ஐந்தாறு தினங்கள் நேரம் கொடுக்க வேண்டும் அல்லது மறைமுக வாக்குப்பதிவை நடத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். இருமுறை சபாநாயகர் அவையை ஒத்தி வைத்தார். 3 மணிக்கு அவை தொடங்குவதற்கு முன்பே இரண்டரை மணியளவில், காவல்துறையையும், அடியாட்களையும் வரவழைத்து, சட்டமன்றத்தில் இருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்களான எங்களை எல்லாம் அடித்து, உதைத்து, துன்புறுத்தி, மூட்டைகளை தூக்குவது போல எங்களை எல்லாம் குண்டு கட்டாக தூக்கி வந்து, அவைக்கு வெளியில் வீசினார்கள். இதில் ரவிசந்திரன் என்ற சட்டமன்ற உறுப்பினர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். பல சட்டமன்ற உறுப்பினர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். அதில் நானும் தாக்கப்பட்டு, எனது சட்டை கிழிந்துள்ளது. அதன் பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பை சர்வாதிகார முறையில் நடத்தியுள்ளனர்.

இதுபற்றி எல்லாம் நாங்கள் மாண்புமிகு கவர்னரிடத்திலும் எடுத்துச் சொல்லியிருக்கிறோம். நாங்கள் சொன்னதை உன்னிப்பாக கேட்டுக் கொண்ட கவர்னர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

இதனையடுத்து, நாங்கள் அனைவரும் மெரினாவில் உள்ள காந்தி சிலை எதிரில் அமைதி வழியில் எங்கள் எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தை தொடங்கினோம். ஆனால் காவல்துறையினர் எங்களை கைது செய்து கொண்டு செல்கின்றனர். எது எப்படியானாலும், இந்தப் போராட்டத்தை திமுகதான் நடத்தும் என்பது இல்லை.

குற்றவாளியான சசிகலாவின் பினாமியாக உள்ள எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி வரவே கூடாதென்று மக்கள் உறுதியோடு இருந்தார்கள். ஆனால் அவர்கள் இன்றைக்கு மிகுந்த அதிர்ச்சிக்கும், பெரும் அச்சத்திற்கும் ஆளாகியுள்ளனர். எனவே, இந்த ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்ற பொதுமக்களுடன், திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மட்டுமல்ல, பல்வேறு கட்சிகளையும், இந்த ஆட்சியின் மீது அருவருப்பிலும், கோபத்திலும் உள்ள ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ஒன்று திரட்டி, அமைதி வழியிலான ஒரு விரைவில் மிகப்பெரிய தொடர் போராட்டத்தில் ஈடுபட நாங்கள் முடிவெடுத்துள்ளோம்.

கேள்வி: தற்போது மெரினாவில் பெருமளவு பொதுமக்கள் திரண்டு இருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?

ஸ்டாலின்: பொதுமக்களை பொறுத்தவரையில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அவரது மரணத்தில் மர்மம் உள்ளது என்று பேசப்படுகிறது, அதற்கு சசிகலா குடும்பம் தான் காரணம் என்றும் மக்கள் உணர்ந்து கொண்டு இருக்கிறார்கள். அப்போது ஓ.பன்னீர்செல்வம் அவர்களை கட்டாயப்படுத்தி, எழுதி வாங்கிக்கொண்டு முதல்வர் பதவியில்

உட்கார வைத்து விட்டு, பிறகு சசிகலாவை சட்டமன்றக் குழு தலைவராக தேர்ந்தெடுத்து, அந்த பதவியில் அமர்த்தும் சூழலை ஏற்படுத்தினார்கள். இந்த நிலையில், நல்லவேளையாக நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த காரணத்தால், அவரால் முதல்வராக முடியாமல் போனது.

ஆனால், பன்னீர்செல்வமாக இருந்தாலும் சரி அல்லது எடப்பாடி பழனிச்சாமியாக இருந்தாலும் சரி, இந்த ஆட்சி இருக்கக்கூடாது என்று தான் பொதுமக்கள் கருதுகிறார்கள். அதனால் தான், நாங்கள் இந்த அறவழி போராட்டம் நடத்துவதென திடீரென முடிவெடுத்து, காந்தி சிலை எதிரில் உட்கார்ந்ததும், ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள் எல்லாம் எங்களுக்கு ஆதரவு தெரிவித்து திரண்டனர்.

கேள்வி: கவர்னர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருக்கும் பட்சத்தில் உங்கள் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

ஸ்டாலின்: கவர்னர் அமைதியாக இருந்தால், நாங்களும் அமைதி வழியிலான போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x