Published : 30 Jun 2017 08:48 AM
Last Updated : 30 Jun 2017 08:48 AM

ரூ.50 லட்சம் வரை வணிகம் செய்யும் சிறு வணிகர்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தல்

ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை வணிகம் செய்யும் சிறு வணிகர்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த உச்ச வரம்பை ரூ.50 லட்சமாக மாற்றி அமைக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தமிழக அரசு வணிகவரித்துறை சார்பில் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் (ஜிஎஸ்டி) குறித்த கருத்தரங்கம் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற மாநில நிதியமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள தாவது:

ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி வரிச் சட்டம் பற்றிய தெளிவான நிலையை வணிகர்கள் இதுவரை அறிந்து கொள்ளவில்லை. இதனை அமல்படுத்த உள்ள அதிகாரிகளுக்கும் இதுகுறித்து தெளிவான புரிதல் இன்னும் ஏற்படவில்லை. வணிகர்கள் ஜிஎஸ்டி வரி முறைக்கு இன்னும் தயாராகவில்லை. எனவே, வணிகர்கள் மீது எவ்வித சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் இருப்பதற்கு ஒருவருட காலம் அவகாசம் தர வேண்டும்.

ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை வணிகம் செய்யும் சிறு வணிகர்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த உச்ச வரம்பை ரூ.50 லட்சமாக மாற்றி அமைக்க வேண்டும்.

ஜிஎஸ்டியை அமல்படுத்து வதன் மூலம் மத்திய அரசுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வருவாய் வரும். இதில் 2 சதவீத தொகையை சிறப்பு ஒதுக்கீடு செய்து, அதில் ஒரு சதவீதத்தை 60 வயதைக் கடந்த வணிகர்களுக்கு ஓய்வூதியமாக வழங்க வேண்டும். மீதமுள்ள 1 சதவீதத் தொகையை விபத்து, இயற்கை சீற்றம், கலவரம் போன்றவற்றால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கு இழப்பீடாக வழங்கிட வேண்டும்.

ஜிஎஸ்டி வரி முறைக்கு மாறிய பின்னர் மாதத்துக்கு மூன்று முறை ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும் என்ற சட்ட விதியை மாற்றி மாதத்துக்கு ஒரு முறை ரிட்டன் தாக்கல் செய்யும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும். 50 கிராம் வரை உள்ள ஊறுகாய்க்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதற்கு மேல் 5 சதவீதம் வரிவிதிப்பு முறை இருந்தது. ஆனால் தற்போது அனைத்துக்கும் 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள் ளது. இதனால் சிறுதொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு பெரிய நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல் மூடவேண்டிய நிலை ஏற்பட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்படும்.

மேலும், வீட்டு உபயோகப் பொருட்கள், மருத்துவ சாதனங்கள், தீப்பெட்டி, ஹேர்ஆயில், சோப்பு, பென்சில், பற்பசை, கேஸ் ஸ்டவ், குடிநீர் கேன் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் மீது 18 முதல் 28 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி சட்டம் உண்மையிலேயே முழுமையாக வெற்றி அடைய வேண்டும் எனில், ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x