

ரயிலில் வங்கி பணம் கொள்ளை யடிக்கப்பட்ட வழக்கு விசாரணை நடைபெறும் சைதாப்பேட்டை நீதி மன்றத்தில், உடைக்கப்பட்ட பணப் பெட்டிகளை போலீஸார் ஒப்படைத்தனர்.
சேலத்தில் இருந்து சென்னைக்கு கடந்த 8-ம் தேதி வந்த ரயிலில் தனிப்பெட்டியில் ரூ.323 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் கொண்டு வரப்பட்டன. இதில் ரூ.5.75 கோடி பணத்தை ரயிலின் மேற்கூரை யில் துளையிட்டு மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட் டனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை முக்கிய மான தடயங்கள் சிக்கவில்லை.
இந்தியா முழுவதும் இருந்து 14 பிரபல ரயில் கொள்ளையர்களின் பட்டியலை சிபிசிஐடி போலீஸார் தயாரித்துள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு விசாரணை சென்னை சைதாப்பேட்டை 11-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ரயிலின் ஒரு சரக்குப் பெட்டிக்குள் மொத்தம் 226 சிறிய மரப்பெட்டிகளில் ரூ.323 கோடி கொண்டுவரப்பட்டது. இதில் 5 மரப்பெட்டிகளை மட்டுமே உடைத்து ரூ.5.75 கோடி கொள்ளை யடிக்கப்பட்டது. உடைக்கப்பட்ட அந்த 5 மரப்பெட்டிகளையும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று காலையில் சிபிசிஐடி போலீஸார் ஒப்படைத்தனர்.