

சென்னை நகர தெருக்களில் கருப்பு நிற மலைப்பாம்புகள் போல திறந்த வெளியில் கிடக்கும் உயர் அழுத்த மின்சார கேபிள்கள் மக்களை அச்சுறுத்துகின்றன. கனரக வாகனங்கள் ஏறிச் செல்வதால் கேபிள்கள் சேதமடைந்து வருகின்றன. இது விபத்தை ஏற்படுத்தும் முன்பு மின்வாரியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னையில் வீடுகள், கடைகள், சிறிய தொழிற்சாலைகள் என அனைத்துக்கும் தரைக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள மின்சார கேபிள்கள் மூலம் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. 2015 டிசம்பர் 1-ம் தேதி சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை மாநகரமே மிதந்தது. பல பகுதிகளில் 2 நாட்கள் வரை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ள நீர் முழுமையாக வடியும்வரை மின் விநியோகம் தரப்படவில்லை. பல்வேறு இடங்களில் 5 நாட்களுக்குப் பிறகே மின்சாரம் விநியோகிக்கப்பட்டது.
அப்போது மின்சாரக் கட்டமைப்பு, சாதனங்களின் சேதம் குறித்து ஆய்வு நடத்திய மின்துறை அமைச்சர், சென்னை மாநகரில் தரைமட்டத்தில் உள்ள அனைத்து மின் இணைப்புப் பெட்டிகளையும் உயரமான இடத்தில் வைக்கவும், தரைக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள மின்சார கேபிள்கள் சேதம் அடைந்திருந்தால் அவற்றை அப்புறப்படுத்திவிட்டு புதிய கேபிள் பதிக்கவும் உத்தரவிட்டார். ஆனால், மின் இணைப்புப் பெட்டிகள் அனைத்தும் உயரமான இடத்தில் வைக்கப்படவில்லை.
வளசரவாக்கம், விருகம்பாக்கம், போரூர், முகலிவாக்கம், மணப்பாக்கம், கோடம்பாக்கம், கே.கே.நகர், பெரம்பூர், அண்ணாசாலை உட்பட பல்வேறு இடங்களில் மழைநீர் கால்வாய் தோண்டுதல், அதை விரிவுபடுத்துதல், பராமரிப்புப் பணி போன்றவற்றுக்காக குழி பறித்தனர். அப்போது வெளியே எடுத்து போடப்பட்ட உயர்அழுத்த மின்சார கேபிள்கள் அப்படியே தெருக்களில் திறந்தவெளியில் போடப்பட்டுள்ளன. அந்த கேபிள்களில் இருசக்கர வாகனங்கள், கார், வேன், லாரி போன்றவை ஏறிச் செல்வதைக் காண முடிகிறது. 240 வோல்ட் முதல் 11 ஆயிரம் வோல்ட் வரையுள்ள இந்த கேபிள்கள் சேதமடைந்து மின்கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த ஆபத்தைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருக்கிறது மின்துறை.
மின்சார கேபிள்களை தரையில் 2 அடி ஆழம் தோண்டித்தான் பதிக்க வேண்டும். ஆனால், பல பகுதிகளில் அரை அடி, முக்கால் அடி ஆழம் மட்டுமே தோண்டி பதித்துள்ளனர். நகரின் பல பகுதிகளில் நடந்த தீ விபத்துகளில் பெரும்பாலானவை மின்கசிவு காரணமாகவே நடந்துள்ளது. இந்த நிலையில், உயர் மின் அழுத்த மின்சார கேபிள்கள் தெருக்களில் திறந்தவெளியில் கிடப்பதும், அதன்மீது வாகனங்கள் சர்வசாதாரணமாக ஏறிச் செல்வதும் அலட்சியத்தின் உச்சம்.
இதுகுறித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு முன்னாள் தலைவரும், சிஐடியு மாநில துணைத் தலைவருமான கே.விஜயன் கூறியபோது, ‘‘சென்னையில் 8 ஆயிரம் பேர் உட்பட தமிழகம் முழுவதும் மின்சார வாரியத்தில் 40 ஆயிரம் மின் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களே இல்லை என்கின்றனர். ஆனால், 25 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். துளையிடும் இயந்திரம் உட்பட மின்சார வேலை தொடர்பான சாதனங்கள் தொழிலாளர்களுக்கு போதிய அளவு தரப்படவில்லை. நுகர்வோருக்கு விரைவில் மின் விநியோகம் தரப்பட வேண்டும் என்பதற்காக மின்சார கேபிள்களை தரையில் பதிப்பதற்கு பதிலாக சாலையோரத்தில் போட்டுவிட்டு மின்விநியோகம் கொடுத்து விடுகின்றனர். அந்த கேபிள்களை பாதுகாப்பாக பதிக்க அவகாசம் கொடுக்கப்படுவது இல்லை’’ என்றார்.
மலைப்பாம்புகள் போல சென்னை தெருக்களில் கிடக்கும் உயர் அழுத்த மின்சார கேபிள்களால் ஆபத்து நிகழும் முன்பு மின்வாரியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.