

தகுதிவாய்ந்த வக்காளர்களை அதிகளவில் பட்டியலில் சேர்த்தல் மற்றும் பிழைகளை நீக்கும் வகையில் ஜூலை 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சிறப்பு சேர்த்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தகுதி வாய்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் அதிகளவில் சேர்த்தல் மற்றும் பிழைகளை நீ்க்கும் வகையில் இந்தாண்டு ஜூலை 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சிறப்பு திருத்தப் பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த சிறப்புப் பணியை அனைத்து மாநிலங்களிலும் தொடங்கி ‘எந்த ஒரு வாக்காளரும் விடுபட்டு விடக் கூடாது’ என்ற கருப்பொருளின் கீழ் பணிகளை செயல்படுத்தவும் ஆணையம் அறிவுறுத்தி யுள்ளது.
இதன்படி அதிகளவில் இளைய வக்காளர்களை குறிப்பாக 18-19 வயதுடையவர்களை பட்டியலில் சேர்க்க தற்போது நடக்கும் தொடர் திருத்த காலத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 31-ம் தேதி நிறைவுபெறும் இச்சிறப்புப் பணியின்போது வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களில் படிவங்களைச் சமர்ப்பிக்கலாம். அஞ்சலகம் மூலமும் படிவங்களை அனுப்பலாம். ‘www.elections.tn.gov.in’ இணையதளத்தின் மூலமும், இ-சேவை மையங்களின் மூலமும் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
சிறப்பு முகாம்கள்
மேலும், ஜூலை 9 மற்றும் 23 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த முகாம் நடக்கும் நாட்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நிரப்பப்பட்ட படிவங்களை பெறுவார்கள். இச்சிறப்பு பணியின்போது இறந்த வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் பணியும் நடக்கிறது.
இறப்பு பதிவு செய்யப்பட்ட விவரங்கள் உள்ளாட்சி அலுவலகங்களில் இருந்து பெறப் பட்டு அதன்படி, இறந்த வாக் காளர்கள் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.