

மதுரையில் வழக்கறிஞர் காரின் அடியில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்துச் சிதறியது. வெடிகுண்டு சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளதால் மதுரை மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த அக்பர் அலி (52). சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்குரைஞர். இவர் புதன்கிழமை நெல்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்துக்கு காரில் சென்றார். காரைக் கீழே நிறுத்திவிட்டு, மாடியிலுள்ள அலுவலகத்தில் மனுதாரர்களிடம் பேசிக் கொண்டி ருந்தார். பகல் 1 மணி அளவில் கீழே குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. அக்பர் அலி ஓடிவந்து பார்த்தபோது, அவரது காரின் அடிப்பகுதியில் உருகிய நிலையில் பிளாஸ்டிக் பாட்டில், 2 பேட்டரிகள், காந்தம், சிறிய மின் வயர்கள், சணல்கள், வெடிமருந்து துகள்கள் சிதறிக் கிடந்தன.
அதிர்ச்சியடைந்த அக்பர் அலி இதுபற்றி மாநகரப் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். அதன்பேரில் மாநகர துணை ஆணையர் தமிழ்சந்திரன், உதவி ஆணையர் துரைசாமி, விளக்குத்தூண் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அக்பர் அலி செய்தியாளர்களிடம் கூறியது:
என்னைக் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வெடிகுண்டை வைத்துள்ளனர். ஆனால் நான் காரை எடுப்பதற்கு முன்பே வெடித்துவிட்டதால் உயிர் தப்பியுள்ளேன். சந்தேகத்துக்குரியவர்கள் குறித்த விவரத்தை போலீசாரிடம் தெரிவிப்பேன் என்றார்.
பின்னர் வெடிமருந்து தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீரியம் குறைந்த வெடிமருந்து
இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ‘பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் மண்ணெண்ணெய்யை ஊற்றி, அதன்மீது வெடிபொருள்களை சணலால் கட்டி, இந்த வெடிகுண்டை தயார் செய்துள்ளனர். இதனை முதலில் அக்பர் அலி காரின் பெட்ரோல் டாங்குக்குள் நுழைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அந்த முயற்சி நிறைவேறாததால் காரின் அடிப்பகுதியில் காந்தத்துடன் இணைத்து பொருத்தியுள்ளனர். வெடிமருந்தின் வீரியம் குறைவாக இருந்ததால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.
காரணம் என்ன?
போலீசார் மேலும் கூறுகையில், ‘மதுரையில் ஏற்கெனவே நடந்த சில குண்டுவெடிப்புகள் மற்றும் தேனி மதுபானக் கடையில் நடந்த குண்டுவெடிப்புகளில் பயன்படுத்தியது போன்ற வெடிகுண்டே இங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஒரே குழுவாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.
மதுரையிலுள்ள ஒரு மசூதியில் அங்கு வந்து செல்வோரைக் கண்காணிக்க கேமரா பொருத்துவது தொடர்பாக இருதரப்பு கருத்துகள் நிலவி வருகின்றன. இதில் அக்பர் அலி கண்காணிப்பு கேமரா பொருத்த ஆதரவாக பேசி வந்துள்ளார்.
எனவே அவரை மிரட்டும் வகையில், இந்த வெடிகுண்டு வைக்கப்பட்டதா என விசாரித்து வருகிறோம்’ என்றனர்.