

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகல் கிடைத்தவுடன் ஆஜராக வேண்டும் என கர்நாடக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. கர்நாடக சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை அப்படியே ஏற்றுக்கொண்டு இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடக சிறப்பு நீதிமன்ற பொறுப்பு நீதிபதி அசோக் நாராயணன் முன்னிலையில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அறை எண் 48-ல் மூவரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகல் கிடைத்தவுடன் ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.