

புதிய டிஜிபியாக பதவியேற்றுள்ள அசோக்குமாருக்கு காலவர் பதவி உயர்வு, சட்டம்-ஒழுங்கு குறித்த எதிர்க்கட்சிகளின் புகார், அதிகரித்து வரும் ரியல் எஸ்டேட் கொலைகளை தடுப்பது உள்ளிட்ட சவால்கள் காத்திருக்கின்றன.
தமிழக டிஜிபியாக இருந்த ராமானுஜம் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து புதிய டிஜிபியாக அசோக்குமார் நேற்று பொறுப் பேற்றுக் கொண்டார். முன்னாள் டிஜிபி ராமானுஜம், அரசு ஆலோச கராக நியமிக்கப்பட்டுள் ளார். இவர் டிஜிபியாக இருந்த போது, காவலர்களுக்கு பல்வேறு சலுகைகள் கிடைத்தன. குறிப்பாக, காவலர்களுக்கான சொந்த இல்லம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, வண்டலூர் அருகே வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்கு அரசு ரூ.275 கோடி ஒதுக்கியுள் ளது. இதன்மூலம் 2,673 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
காவலர்களுக்கு சி.யூ.ஜி.யுடன் கூடிய செல்போன் சிம்கார்டு வழங்கும் திட்டத்தையும் ராமானுஜம் கொண்டுவந்தார். இந்தத் திட்டத்தில் காவலர்களும், அவர்களின் குடும்ப உறுப்பி னர்களும் சலுகை விலையில் சிம்கார்டுகளைப் பெறலாம். இதுவரை ஒரு லட்சம் காவலர்கள் இந்த சிம்கார்டுகளை பெற்றுள்ளனர். எதிர்காலத்தில் இதன் எண்ணிக்கை 8 லட்சம் வரை உயர்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.
மேலும், ராமானுஜம் பதவியில் இருந்த காலத்தில் தமிழக காவலர் களுக்கு 8 சிறப்புத் திட்டங்கள் மூலம் 503 சலுகைகளை பெற்றுத் தந்துள்ளார். காவல் துறைக்கு தேவையான 22,522 நவீன உப கரணங்கள் வாங்கப்பட் டுள்ளன.
தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கும் ராமானுஜத்துக்கு டிஜிபி அலுவ லகத்திலேயே தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அயல்நாட்டு பணிகளை கவனிக்கும் ஐ.ஜி.யின் அறை மாற்றம் செய்யப்பட்டு, அந்த அறை ராமானுஜத்துக்கு ஒதுக்கப்பட் டுள்ளது. நேற்று காலை தனது அறையில் பொறுப்பேற்றுக் கொண்ட ராமானுஜத்துக்கு, டிஜிபி அசோக்குமார் வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில், புதிய டிஜிபியாக பதவியேற்றுள்ள அசோக்குமாருக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன. தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர்களாக பணியில் சேருவோர் 10 ஆண்டுகள் பணி முடித்ததும் முதல் நிலை காவலர்களாக பதவி உயர்வு பெறுவர். அதைத்தொடர்ந்து 5 ஆண்டு கள் பணி முடித்தால் ஏட்டுகளாக பதவி உயர்வு பெறுவர். 10 ஆண்டுகள் ஏட்டாக பணிபுரிந்தவர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி வழங்கப்படும்.
கோரிக்கைகள்
ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சரியான காலத்தில் பதவி உயர்வு வழங்கப்படும் நிலையில், காவலர்கள் மட்டும் பல ஆண்டு கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போது பதவி உயர்வுக்காக சுமார் 20 ஆயிரம் காவலர்கள் காத்திருக்கின்றனர். இதுகுறித்து புதிய டிஜிபியிடம் முறையிட அனைவரும் காத்திருக் கின்றனர்.
பதவி உயர்வு கிடைக்காதவர் கள் அனைவரும் ஒன்று சேர்ந்து புதிதாக ஒரு குழுவை ஆரம்பித்து தலைமையிடம் முறையிட திட்ட மிட்டுள்ளனர். ஏட்டாக இருக்கும் 4 பேர் அனைவரையும் ஒன்று திரட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். பதவி உயர்வு கிடைக்காத பெண் காவலர்கள் பலரும் இவர்களின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சட்டம் ஒழுங்கு
அசோக்குமாருக்கு உள்ள இன்னொரு சவால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை. ‘பன்னீர்செல்வம் அதிகாரம் இல்லாத முதல்வராக இருக்கிறார். இதனால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை’ என்று எதிர்க்கட்சியினர் பிரச்சாரம் செய்துவரும் நிலையில் இதை சரிசெய்யும் பெரிய பொறுப்பு புதிய டிஜிபி அசோக்குமாருக்கு உள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடர் இந்தமாத இறுதியில் நடக்கக்கூடும் என தெரிகிறது. அதுவரை பெரிய பிரச்சினைகள் எதுவும் ஏற்படாமல் பார்க்க வேண்டிய பொறுப்பும் அவருக்கு உள்ளது.
தமிழகத்தில், ரியல் எஸ்டேட் தகராறால் நடக்கும் கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு எதிராக உயர் நீதிமன்றம் சாட்டையை சுழற்றியிருக்கும் வேளையில், அதை தடுக்க வேண்டிய கட்டாயம் புதிய டிஜிபி அசோக்குமாருக்கு ஏற்பட்டுள்ளது.
சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசின் ஆலோசகர் ராமானுஜம் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கும் ராமா னுஜம், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர். ராமானுஜத்துக்கும், அசோக்குமாருக்கும் நல்ல நட்பு இருக்கிறது. டிஜிபி வளாகத் திலேயே ராமானுஜத்துக்கும் அறை ஒதுக்கப்பட்டிருப்பதால் ஒரே இடத்தில் இரு அதிகார மையங்கள் இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆளும் கட்சியினர் நடத்தும் போராட் டங்களை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டிய நிலையும் புதிய டிஜிபி அசோக்குமாருக்கு உள்ளது.