விவசாயிகள் தற்கொலை முயற்சிக்கு ஆளாகாமல் இருக்க நடவடிக்கை தேவை: விஜயகாந்த்

விவசாயிகள் தற்கொலை முயற்சிக்கு ஆளாகாமல் இருக்க நடவடிக்கை தேவை: விஜயகாந்த்
Updated on
1 min read

விவசாயிகள் தற்கொலை முயற்சிக்கு ஆளாகாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பருவமழை பொய்த்துவிட்டதால் போதிய தண்ணீர் இல்லாமல் விவசாய விளைநிலங்களில் பயிரிடப்பட்ட நெல், வாழை மற்றும் மானாவரி பயிர்கள் கருகிவிட்டது. அதனை கண்ட விவசாயிகள் மன வேதனை அடைந்து மாரடைப்பால், நாகை மாவட்டத்தில் 34 பேர், திருவாரூரில் 12 பேர், தஞ்சாவூரில் 4 பேர், தூத்துக்குடியில் 2 பேர் மற்றும் புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருச்சி, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களில் 60 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர் என்கிற செய்தி அதிர்ச்சியையும், மன வேதனையையும் அளிக்கிறது.

விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான், நாம் சோற்றில் கை வைக்கமுடியும் எங்கிற பழமொழிக்கு ஏற்ப அவர்களுடைய வாழ்க்கையும், வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. ஆளுகின்ற அரசு பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நிதியுதவியை, சென்ற அக்டோபர் மாதமே வழங்கி இருக்க வேண்டும். நான்கு மாதங்கள் ஆகியும் இன்று வரை வழங்கப்படவில்லை என விவசாயிகள் அரசை குறைகூறுகிறார்கள்.

மேலும் விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் கடன் பெற சென்றால், உதாரணமாக 5 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களுக்கு ஒரு ஏக்கர் நிலத்திற்கு மட்டும்தான் கடன் வழங்கப்படுகிறது. மீதம் நான்கு ஏக்கருக்கு கந்துவட்டிக்காரர்களிடம் அதிக வட்டிக்கு பணம் வாங்கி விவசாயம் செய்தும்,போதிய தண்ணீர் இல்லாமல் விளைநிலங்கள் பொய்த்துவிட்டது. இதனால் பெற்ற கடனை திரும்ப செலுத்தமுடியாமல் தற்கொலைக்கு ஆளாகிறார்கள்.

தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தைக் கைவிட்டு விவசாயிகள் எதையும் தைரியமாக எதிர்த்து போராட வேண்டும். தங்களுக்குப் பின்னால் குடும்பம் இருக்கிறது என்பதை மனதில் கொண்டு, இனிமேல் விவசாயிகள் யாரும் தற்கொலை முயற்ச்சிக்கு ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

ஆளுகின்ற அரசு ஜெயலலிதா இறந்த பிறகு சட்டதிட்டத்திற்கு உட்பட்டு முதல்வர் பதவியை உடனே ஏற்பதும், தங்களுக்குத் தேவையென்றால் பாரத பிரதமரை நேரில் சென்று சந்திப்பது போல, ஏன் இந்த விவசாயிகளுடைய பிரச்சினைக்கு தீர்வு காண, தமிழக முதல்வரோ, அல்லது வேளாண்மைத்துறை அமைச்சரோ பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, அங்குள்ள விவசாயிகளுடைய குறைகளை கேட்டறிந்து, பாரத பிரதமரை நேரில் சென்று சந்தித்து விவசாயிகளுனுடைய பிரச்சினையை முழுமையாக தீர்வு காண ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

இனிமேலாவது நமது விவசாயிகள் தற்கொலை முயற்சிக்கு ஆளாகாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, உயிரிழந்த குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in