

ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை நடக்கும் மாட்டுச்சந்தையில் ஈரோடு, நாமக்கல், சேலம், கோவை, திருப்பூர், கரூர், தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பசுமாடுகள், எருமை, வளர்ப்பு கன்றுகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் மாட்டுச்சந்தையில் மாடுகளை வாங்கிச் செல்கின்றனர்.
ஈரோடு மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கடும் வறட்சியால், கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கால்நடைகளை பராமரிக்க முடியாத விவசாயிகள், கடந்த சில வாரங்களாக அதிக அளவில் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
நேற்று நடந்த மாட்டுச்சந்தையில் 500 பசுமாடுகள், 450 எருமை மாடுகள், 400 கறவை மாடுகள், 300 வளர்ப்பு கன்றுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. 100-க்கும் மேற்பட்ட சினை பசுமாடுகளும் விற்பனைக்காக வந்திருந்தன. அவற்றை வாங்கி செல்வதில் வியாபாரிகள் ஆர்வம் காட்டினர். நேற்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மாடுகளில் 90 சதவீதம் விற்பனையானதாக மாட்டுச்சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.