

திருப்பூரில் பறிமுதல் செய்யப் பட்ட ரூ.570 கோடி குறித்து சிபிஐ விசாரணையில் உண்மை தெரியவரும் என திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழிகள் வழங்கும் விழா, பொதுக்கூட்டம் திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. எம்எல்ஏ எ.வ.வேலு தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர்கள் பெ.சு.தி.சரவணன், வி.பி.அண் ணாமலை, அ.சிவக்குமார் உள்ளிட் டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் மா.சுந்தரேசன் வரவேற்றார். கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழிகளை வழங்கி திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் சிறப்புரை யாற்றினார்.
அப்போது அவர் பேசும்போது, “தமிழுக்காகவும், தமிழர் களுக்காகவும் 93 வயதிலும் திமுக தலைவர் கருணாநிதி உழைக்கிறார். ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்துக்காக முதலில் குரல் கொடுப்பவர் கருணாநிதி. ஆனால், மத்திய அரசின் உதவி, பண பலம் மற்றும் ஆட்சி அதிகாரத்தால் மீண்டும் ஆட்சிக்கு வந்தவர்கள், ஈழத் தமிழர்கள் பிரச்சினை மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை.
திருப்பூர் மாவட்டத்தில் வாக் காளர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்து வரப்பட்ட ரூ.570 கோடியை அரசு அதிகாரிகள் பிடித்து வைத்திருந்தாலும் கூட, அந்தத் தொகை யாருடையது என இதுவரை தெரியவில்லை. சம்பந்தப்பட்டவர்களை மத்தியில் ஆட்சி நடத்துபவர்கள் காப்பாற்றி உள்ளனர். அந்தப் பணம் யாருடையது என்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வர திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.இதுகுறித்து சிபிஐ விசாரணையில் உண்மை வெளிவரும்.
கொள்கை இல்லாமல் பலர் கட்சி நடத்துகின்றனர். ஆனால், கொள்கை மற்றும் லட்சியத்துக்காக உருவான இயக்கம் திமுக. தமிழ்நாடு தமிழர்களுக்காக வேண்டும் என்ற எண்ணத்தை தமிழர்களிடையே ஏற்படுத்த வேண்டியது நமது கடமை. தமிழ் உணர்வு தலையெடுக்க நாம் பணியாற்ற வேண்டும். தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும்” என்றார்.
இதில் எம்எல்ஏ கு.பிச்சாண்டி, மாவட்ட அவைத் தலைவர் த.வேணு கோபால், முன்னாள் எம்எல்ஏ பெ.சு.திருவேங்கடம், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.தரன், மாவட்டப் பொரு ளாளர் எஸ்.பன்னீர்செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர். நகரச் செயலாளர் கார்த்திவேல்மாறன் நன்றி கூறினார்.