காவிரி மேலாண்மை வாரியத்தை வலுவான அமைப்பாக உருவாக்க வேண்டும்: ராமதாஸ்

காவிரி மேலாண்மை வாரியத்தை வலுவான அமைப்பாக உருவாக்க வேண்டும்: ராமதாஸ்
Updated on
1 min read

பாக்ரா–பியாஸ் மேலாண்மை வாரியத்தைப் போலவே காவிரி மேலாண்மை வாரியத்தையும் வலுவான அமைப்பாக உருவாக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று மாநில அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''செப்டம்பர் 21 முதல் 27 வரை 7 நாட்களுக்கு விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை கடந்த 3 தினங்களாக கர்நாடகம் செயல்படுத்தவில்லை. அரசியலமைப்புச் சட்டத்துக்கும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும் எதிரான இந்த செயல்களுக்கு மத்திய அரசையும் துணையாக சேர்த்துக்கொள்ள கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

அதன் அடிப்படையில்தான் மத்திய நீர் வளத்துறை அமைச்சர் உமாபாரதியை சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, 'தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது. இதற்கு மத்திய அரசு துணை நிற்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் தேவையில்லை' என்றெல்லாம் கூறியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழகமும், கர்நாடகமும் கேட்கவில்லை என்று அவர் பொய்யாக கூறியுள்ளார்.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது தமிழகத்துக்கு கிடைத்த அரிய வாய்ப்ப்பு. பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், டெல்லி, சண்டிகர் ஆகிய மாநிலங்களுக்கு நீரும், மின்சாரமும் அளிப்பதற்காக பக்ராநங்கல், பியாஸ் ஆகிய அணைகளை நிர்வகிப்பதற்காக அமைக்கப்பட்ட பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியம் போன்று காவிரி மேலாண்மை வாரியத்தையும் வலுவான அமைப்பாக உருவாக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in