Published : 11 Jan 2017 05:32 PM
Last Updated : 11 Jan 2017 05:32 PM

துணைவேந்தர் பதவிகளில் தலித்துகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்: திருமாவளவன்

துணைவேந்தர் பதவிகளில் தலித்துகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் 24 பல்கலைக் கழகங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் துணைவேந்தர் பதவிகள் மற்றும் சில முதன்மை அதிகாரமுள்ள பதவிகளில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு கல்வி தகுதியும், முதுநிலைத் தகுதியும் இருந்தாலும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டே வருகிறார்கள் என்பது வேதனைக்குரியதாகும்.

தற்போது, அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் துணைவேந்தர் பதவிகள் ஓராண்டுக்கும் மேலாக காலியாக உள்ளன. காலியாக உள்ள அவ்விடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

கடந்த காலங்களில் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் துணைவேந்தர்கள் பதவிகளை நிரப்புகின்றபோது பல்வேறு குளறுபடிகள் நடந்தன. அதனையொட்டி நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளன.

குறிப்பாக, அரசியல் பின்புலம் மற்றும் பணபலம் ஆகியவற்றை அளவுகோலாக வைத்து அப்பதவிகள் நிரப்பப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. இவைப்போன்ற காரணங்களால் உரிய தகுதியுள்ள தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் துணைவேந்தர் பதவிகளுக்கு வரமுடிவதில்லை.

குறிப்பாக, வரலாற்று சிறப்புவாய்ந்த அண்ணா பல்கலைக் கழகத்தில் இதுவரை தலித் ஒருவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டதேயில்லை. அப்படியென்றால், கல்வித் தகுதியும், முதுநிலைத் தகுதியும் பெற்ற தலித் சமூகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் அங்கு ஒருவருமே இல்லையா என்கிற கேள்வி எழுகிறது. இது மிகவும் கண்டனத்திற்குறியது.

தற்போது மேற்கண்ட பல்கலைக் கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளை நியமனம் செய்வதற்கு தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவானது அரசியல் தலையீடு இல்லாமல் சமூகநீதியைப் பாதுகாக்கும் வகையில் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கும் துணை வேந்தர் பதவிகளில் உரிய பிரதிநிதித்துவம் அளித்திட தேர்வுக்குழுவும், தமிழக அரசும், ஆளுரும் முன்வர வேண்டும்'' என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x