

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழல், நீர்நிலைகளை மாசுபடுத்தாத களிமண் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் போடி, பொம்மைய கவுண்டன்பட்டி, சின்னமனூர் உள்ளிட்ட சில பகு தி களில் சிலைகள் செய்யப்பட்டு வருகின்றன. விசேஷமாக சின்ன மனூரில் மட்டும் களிமண்ணால் சிலை செய்யப்பட்டு வருகிறது. மற்ற இடங்களில் அட்டைகள் மூலம் சிலைகள் செய்யப்படுகின் றன.
மூலப்பொருட்கள் விலை உயர்வு
இதுகுறித்து ‘தி இந்து’விடம் சின்னமனூர் மண்பாண்டத் தொழிலாளர் பி.குமார் கூறியதா வது: ‘‘சுடப்படாத களிமண் மூலம் சிலைகளைச் செய்தால், அது தண்ணீரில் எளிதாகக் கரையும். இதனால் சுற்றுச்சூழல் மற்றும் நீர் நிலைகள் மாசுபடாது. களிமண் சிலை எடை கூடுதலாக இருப்ப தால், பலர் வாங்க ஆர்வம் காட்டுவதில்லை, இதற்கிடையில் களிமண் சிலை செய்ய தேவைப் படும் நெல் உமி, தேங்காய் நார், களிமண், வர்ணம் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது.
ரூ.1,500 முதல் ரூ.3,000 வரை
மூன்றடி உயரம் கொண்ட சிலை செய்ய இரண்டு நாட்களும், 5 அடி உயர சிலை செய்ய மூன்று நாட்களும் ஆகின்றன. ரூ.1,500 முதல் ரூ.3 ஆயிரம் விலையில் சிலைகள் விற்கப்படுகின்றன.
கூடுதல் சிலைக்கு அனுமதி
கடந்த காலங்களில் குளங்களில் களிமண் இலவசமாகக் கிடைத்த து. ஆனால், தற்போது விலைக்கு வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக செலவுபோக எங்களுக்கு கூலிதான் மிஞ்சுகி றது. இந்த நிலையில் பாதுகாப்பைக் காரணம் காட்டி கூடுதல் சிலைகளை வைக்க போலீஸார் அனுமதி மறுத்து வருகின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சிலை விற்பனையாகிறது.
மற்ற நாட்களில் மண் பாண்டம் செய்யும் தொழிலில் ஈடுபடுவோம். எவர்சில்வர், பித்தளை, அலுமினி யம் பாத்திரங்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுவதால், எங்கள் தொழில் நசிவடைந்து வரு கிறது.
இதன் காரணமாக பலர் வேறு தொழிலுக்கு மாறி விட்டனர். நசிந்து வரும் எங்களது தொழிலை காப்பாற்ற இந்த ஆண்டு கூடுதல் சிலைகள் வைக்க காவல்துறை யி னர் அனுமதி வழங்க வேண்டும்’’ என்றார்.