Published : 08 Jan 2014 10:29 AM
Last Updated : 08 Jan 2014 10:29 AM

ஜரிகை நூற்பாலையை நலிவிலிருந்து மீட்க வேண்டும்: வைகோ

தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றான பட்டு தொழில் பட்டுப் போகாமல் பாதுகாத்திட ஜனநாயக சக்திகள் இணைந்து குரல் கொடுத்திட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்: உலகளாவிய அளவில் பட்டு உற்பத்தியில் சீனத்திற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியாவும், இந்திய மாநிலங்களில் பட்டு உற்பத்தியில் தமிழ்நாடு மூன்றாவதாகவும் இருக்கிறது. இந்தியாவில் மல்பரி, முகா, டாசர், எரி ஆகிய நான்கு வகையான பட்டுகளால் தங்கம், வெள்ளி ஜரிகைகளால் கலைநயத்துடன் தயாரிக்கப்படும் பட்டாடையை வெளிநாட்டினரும் விரும்பி வாங்கினர்.

காஞ்சிபுரம் பட்டு தமிழகத்திற்கு ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய் அளவிற்கு பொருளாதாரத்தை ஈட்டும் வர்த்தக மையமாக விளங்கி வருகிறது. இதன் மூலம் காஞ்சிபுரம் பட்டு தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகியது.

அந்தப் பெருமைக்குரிய பட்டுத் தொழில் முடங்கிவிடும் நிலையில் உள்ளது. காரணம், காஞ்சிபுரம் ஒரிக்கையில் இயங்கி வந்த தமிழ்நாடு ஜரிகை நூற்பாலையிலிருந்து ஜரிகைகள் உற்பத்தி செய்து பட்டு கூட்டுறவு சங்கங்களுக்கு விநியோகிக்கப்பட்டு அதன் மூலம் பல்லாயிரக் கணக்கான உறுப்பினர்கள் பயன்பட்டு வந்தனர். இந்நிலையில் நிர்வாக முறைகேடு காரணமாக கடந்த 2013 நவம்பர் மாதம் முதல் தமிழ்நாடு ஜரிகை நூற்பாலை உற்பத்தியை நிறுத்தி வைத்துவிட்டது. இதனால் தை திருநாள் பொங்கல் பண்டிகைக்கும், திருமண முகூர்த்தத்திற்கும் பட்டுப்புடவை, வேட்டி நெசவு செய்ய முடியாமல் வருவாய் இனறி நெசவாளர்கள் வாடுகிறார்கள்.

ஆன்லைன் வர்த்தகத்தின் காரணமாக பட்டு நெசவுக்கான கச்சா மூலப்பொருட்களான கோரபட்டு, தங்கம், வெள்ளி ஜரிகை கள்ளச் சந்தையில் இடைத்தரகர்களால் பதுக்கி கொள்ளை லாபத்திற்கு விற்கப்பட்டு நெசவாளர்களின் மூலதனம் சூரையாடப்படுகிறது.

எனவே நெசவுத் தொழிலாளர்களுக்கும் அரசுக்கும் இடையே பாலமாக சுதேசிய சோசலிச சிந்தனையுடன் இயங்கும் கூட்டுறவு சங்கங்களையும் பட்டு ஜவுளி உற்பத்தி தொழிற் சங்கத்தினர்களையும் அழைத்து குறைகளை கேட்டறிந்து, அவற்றைக் களைய மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

ஜரிகை மூலப்பொருட்களை கொள்முதல் செய்வதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளால் முடங்கிக் கிடக்கும் நெசவு தொழில் முடக்கத்தை சரிசெய்து, அத்தொழிலை நம்பி வாழும் ஐம்பதாயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு மாநில அரசு விரைந்து சுமுக தீர்வை எடுத்திட வேண்டும்.

மத்திய காங்கிரஸ் அரசு பட்டு நெசவு தொழிலை மேம்படுத்த காஞ்சிபுரத்தில், பலகோடி ரூபாயில் அறிவிக்கப்பட்ட பட்டு பூங்கா திட்டம் முடங்கிப் போனதன் மர்மம் என்ன? அதனால் பயனடைந்தவர்கள் யார்?

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் உலக மயமாக்கல், தாராள மயமாக்கல், தனியார் மயமாக்கல் போன்ற மக்கள் விரோத தவறான கொள்கைகளினால் மக்களின் வாழ்க்கைத் தரமும் வாங்கும் சக்தியும் குறைந்து பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

பத்தாண்டு கால மத்திய காங்கிரஸ் அரசின் துவக்கத்தில் 1 கிலோ கச்சாபட்டு (கோர) (1,200) ஆயிரத்து இருநூறிலிருந்து இன்றைய தேதியில் (4,000) நான்காயிரமாக விலை உயர்ந்துள்ளது. தங்கம் ஒரு சவரன் எட்டு கிராம் (4,500) நான்காயிரத்து ஐநூரிலிருந்து (25,000) இருபத்தி ஐந்தாயிரமாக உயர்ந்துள்ளது.

வெள்ளி கிலோ ஒன்று 7,500 ஏழாயிரத்து ஐநூரிலிருந்து (50,000) ஐம்பதாயிரமாக உயர்ந்துள்ளது. இந்த கடுமையான விலை ஏற்றத்தின் காரணமாக மக்கள் உண்மையான தரமான பட்டு சரிகை புடவைகள் வாங்க முடியாமல் வேறு வழியின்றி போலி பட்டு சரிகை புடவைகளை வாங்கும் நிலைமைக்கு மத்திய காங்கிரஸ் அரசின் தவறான கொள்கையே காரணம்.

மானத்தை மறைக்க ஆடை நைந்து தந்த நெசவாளி எந்த நாட்டில் பட்டினி கிடந்து கஞ்சி தொட்டி திறந்து போராடும் நிலை இருக்கிறதோ அந்த நாடு பாழ்நிலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பது பொருள்.

அன்று அடிமை இந்தியா சுயராஜ்யம் அமைக்க இங்கிலாந்து நாட்டு வெள்ளையர்களை எதிர்த்து அன்னிய துணிகளை புறக்கணிக்க காந்தி நடத்திய விடுதலை வேள்வியில் ராட்டை மிகப்பெரிய போர்க்கருவியாக, போராட்டத்தின் சின்னமாக விளங்கி காங்கிரஸ் கட்சியின் கொடியிலும் இடம்பெற்றது.

இன்று இத்தாலி காந்தியின் வழிகாட்டுதலில் இமாலய ஊழல்கள் செய்து நாட்டின் பொருளாதாரத்தை அதல பாதாளத்தில் தள்ளியுள்ள மத்திய காங்கிரஸ் அரசை எதிர்த்து அதே ராட்டையுடன் போராட நெசவாளப் பெருங்குடி மக்கள் தயாராகி விட்டனர். இதற்கு முடிவுகட்ட 2014 நாடாளுமன்ற தேர்தலில் தக்க பாடத்தை புகட்ட ஆவலுடன் தேர்தலை எதிர்நோக்கி உள்ளனர்.

தைத்திருநாள் பொங்கலுக்கு முன்பாக நிர்வாக குளறுபடியால் ஜரிகை உற்பத்தியை நிறுத்தியுள்ள தமிழக அரசின் கீழ் இயங்கும் காஞ்சிபுரம் ஒரிக்கை தமிழ்நாடு ஜரிகை நூற்பாலை உற்பத்தியை துவக்கி இயங்கிட ஆவண செய்திட வேண்டும். மத்திய அரசும் தேசிய கைத்தறி வளர்ச்சி கழகத்தின் மூலம் கச்சா பட்டை தங்கம் வெள்ளி சரிகைகளை இறக்குமதி செய்து நெசவாளர்களுக்கு மானிய விலையில் வழங்கிட வேண்டும்.

எனவே, தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றான பட்டு தொழில் பட்டுப் போகாமல் பாதுகாத்திட ஜனநாயக சக்திகள் இணைந்து குரல் கொடுத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x