

தமிழக அரசு - டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கும், நோய் தடுப்பு முறைகளை தீவிரப்படுத்துவதற்கும், கொசுக்களை அழிப்பதற்கும் அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இந்த மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி, டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்நோயினால் குழந்தைகள், சிறுவர்கள். பெரியவர்கள் என ஏராளமானோர் அதிக அளவில் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு அவசர சிகிச்சை அளித்து, விரைவில் அவர்கள் குணமடைவதற்கு உண்டான அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். மேலும் டெங்கு நோய் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு அந்நோய் பரவாமல் இருப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
டெங்கு நோயைத் தீர்ப்பதற்கான மருந்துகள் அனைத்தும் போதுமான அளவில் அனைத்து மருத்துவமனைகளிலும் இருப்பில் இருக்க வேண்டும். தமிழக சுகாதாரத்துறை அனைத்து மருத்துவமனைகளிலும் நோய் தீர்க்கும் மருந்துகள் தேவையான அளவிற்கு இருப்பில் இருப்பதை தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும் தற்போது டெங்கு நோய் தாக்கப்பட்ட கிராமப்புற பகுதிகளில் உடனடியாக கொசு ஒழிப்பு முறையை மேற்கொள்ள வேண்டும். அப்பகுதி தெருக்களில், சாக்கடைகளில், பள்ளங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.
மேலும் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் கிராமம் முதல் நகரம் வரை கொசு ஒழிப்பு மருந்தினை தொடர்ந்து தெளித்து கொசுக்கள் உற்பத்தியாவதை தடுத்தும், கழிவுநீர் தேங்காமலும், குப்பைகளை அகற்றியும் முறையாக பராமரிக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
வருகின்ற காலம் மழைக்காலம் என்பதால் டெங்கு நோய் போன்ற வைரஸ் காய்ச்சல் ஏற்படாமல் இருப்பதற்கும், பரவாமல் இருப்பதற்கும் இப்போதிருந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழக மக்கள் நலன் காத்திட வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.