

கோவை மாவட்டத்தில் கடந்த வாரமே தொடங்கிய தென்மேற்கு பருவமழை, ஆங்காங்கே சாரல் மழையுடன் நின்றுவிட்டது. இந்நிலையில், நேற்று பகலில் நகரம், புறநகர்ப் பகுதிகளில் பரவலாக சுமார் 1 மணி நேரம் கன மழை நீடித்தது.
மழையால் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க மாநகரப் பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் நேற்று பெய்த மழை, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை நிரூபித்துவிட்டது. வழக்கம் போல, பல இடங்களில் மழைநீரும், சாக்கடையும் பெருக்கெடுத்து மக்களையும், வாகன ஓட்டிகளையும் கடும் இன்னலுக்கு உள்ளாக்கியது.
நீரில் மூழ்கிய சாலைகள்
குறிச்சி, சுந்தராபுரம், போத்தனூர் பகுதிகளில் தொடங்கிய சாரல்மழை, கொஞ்சம் கொஞ்சமாக நகரப் பகுதியிலும், அதைத் தொடர்ந்து தொண்டாமுத்தூர், சூலூர், துடியலூர் என பரவலாகவும் பெய்தது. இதனால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது. அவிநாசி சாலை பழைய மேம்பாலம், வடகோவை மேம்பாலம், கிக்கானி பள்ளி அருகே உள்ள ரயில்வே பாலம், அரசு மருத்துவமனை அருகே உள்ள லங்கா கார்னர் பால சாலைகள் அனைத்துமே நீரில் மூழ்கின.
இதனால் அப்பகுதிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அரசு அலுவலகங்களும், பொதுமக்கள், வாகன நெருக்கடியும் அதிகமுள்ள ஸ்டேட் பாங்க் சாலையில் வழக்கம்போலவே சாலையெங்கும் நீர் பெருக்கெடுத்தது. சாலையோர கழிவுநீர் வடிகால் அடைப்பு நீக்கப்படாததால், கழிவுநீரும் பெருக்கெடுத்தது.
இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அரசு மருத்துவமனை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழை நின்ற பிறகும் கூட கழிவுநீர் பாதை அடைப்புகள் சரிசெய்யப்படாததால் சாலைகளில் பெருக்கெடுத்த நீர் வடியவில்லை.
கரைபுரண்ட கழிவுநீர்
இதுபோலவே உக்கடம் மஜித்காலனி, அல் அமீன்காலனி பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. போத்தனூரிலிருந்து செட்டிபாளையம் செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் அந்த சாலை எங்கும் கழிவுநீர் பெருக்கெடுத்தது. பொள்ளாச்சி சாலை விரிவாக்கப் பணிகளால் போத்தனூர் சாலையே பலருக்கும் மாற்றுப்பாதையாக பயன்படுகிறது. அந்த சாலை சாக்கடையில் மூழ்கியதால், அப்பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதேபோல ராமநாதபுரம் - நஞ்சுண்டாபுரம் சாலையில் கழிவுநீர் பாதைகளில் அடைப்பு ஏற்பட்டு, சாக்கடையும், குப்பைகளும் கரைபுரண்டு ஓடி அப்பகுதியையே அசுத்தமாக்கி யுள்ளது. இதுதவிர, ரத்தினபுரி, சாய்பாபாகாலனி, வடகோவை உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
மேற்கண்ட இடங்களில் மழையால் பிரச்சினைகள் ஏற்படுவது முதல் முறையல்ல. ஒவ்வொரு மழையின்போதும் இந்த இடங்களில் மழைநீரும், கழிவுநீரும் பெருக்கெடுப்பதும், அதனால் ஒட்டுமொத்த நகரமும் ஸ்தம்பிக்கும் அவலமும் நீடிக்கிறது. நேற்றும் அதுவே நடந்தது.
எனவே பருவமழை தீவிரமடையும் முன்பாக, கழிவுநீர் கால்வாய்களில் அடைப்புகளை நீக்கி செய்யவேண்டிய அவசியம் உள்ளது. அதேபோல அதிக பிரச்சினைகளை ஏற்படுத்தும் ஸ்டேட் பேங்க் சாலை, கிக்கானி பள்ளி அருகே உள்ள ரயில்வே பாலம் ஆகிய இடங்களில் திட்டமிட்டப்பட்ட மழைநீர் வடிகால் வசதிகளை உடனே அமைக்க வேண்டும். லங்கா கார்னரில் மந்தகதியில் நடக்கும் வடிகால் அமைக்கும் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
விரைவில் நடவடிக்கை
இதுகுறித்து மாநகராட்சி துணை ஆணையாளர் பி.காந்திமதியிடம் கேட்டபோது, ‘லங்கா கார்னர் சந்திப்பில் நடந்துவரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை வேகப்படுத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது. அதேபோல பிரச்சினைக்குரிய இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையாளர் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார். அதற்கேற்ப பணிகளும் நடக்கின்றன.
வழக்கமாக மழைநீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தும் இடங்களை சீரமைப்பது குறித்து ஆலோசித்து விரைவில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். மழை தீவிரமடையும் முன்பாக, குறைந்தபட்ச நடவடிக்கைகளாவது எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு கோவை நகர மக்களிடையே ஏற்பட்டுள்ளது.