

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழர் எழுவர் விடுதலை கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தமிழர் எழுவர் விடுதலை கூட்டமைப்பு சார்பில் தமிழ் தேச விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு உறுப்பினர் தியாகு, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், மமக தலைவர் ஜவாஹிருல்லா மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் சென்னையில் நேற்று கூட்டாக நிருபர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழர்கள் 24 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களை மாநில அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால், மத்திய புலனாய்வு பிரிவினர் விசாரித்த வழக்கில் தண்டனை அனுபவிப்பவர்களை மாநில அரசு விடுவிக்க முடியுமா என்பது தொடர்பான விளக்கத்தை அளிக்க 5 நீதிபதிகளை கொண்ட அமர்வு உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டது.
5 நீதிபதிகளை கொண்ட அமர்வு, மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறியது. ஆனால், 7 தமிழர்களின் விடுதலைக்கே தடை என்று தீர்ப்பளிக்கப்பட்டதாக அதனை பலரும் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். சட்டவிதி 161-ன் மூலம் ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி 7 தமிழர்களை விடுதலை செய்யலாம். இதற்கு மாநில அரசு வலியுறுத்த வேண்டும். வரும் ஜனவரி 17-ம் தேதி முதல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு ஆரம்பிக்கிறது. எனவே, 7 தமிழர்கள் விடுதலைக்கு இதுவே நல்ல தருணம் ஆகும். இது தொடர்பாக முதல்வரிடமும் நேரில் வலியுறுத்துவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.