தமிழக கால்நடைத் துறை அதிகாரிகள் மீது தாக்குதல்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

தமிழக கால்நடைத் துறை அதிகாரிகள் மீது தாக்குதல்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்
Updated on
2 min read

பசு பாதுகாப்பு என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுக்கும் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை தடைச் செய்ய அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பசு பாதுகாப்பாளர்கள் என்ற பெயரில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகளால் ராஜஸ்தானில் தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கின்றேன்.

மோடி அரசு செயல்படுத்தி வரும் ராஷ்டிரிய கோகுல் திட்டத்திற்காக தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்பு துறையை சேர்ந்த அதிகாரிகள் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மர் மாவட்டத்திலிருந்து 50 பசு, காளை மற்றும் கன்று குட்டிகளை வாங்கி 5 சுமை ஊர்ந்துகளில் உரிய ஆவணங்களுடன் தமிழகம் நோக்கி வந்துக் கொண்டிருந்த போது அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் செட்டிநாட்டில் உள்ள கால்நடைப் பராமரிப்பு பண்ணைக்கு இந்த மாடுகள் கொண்டு வரவிருந்தன.

ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 15-ன் வழியாக 5 சுமை ஊர்ந்துகளில் மாடுகளை ஏற்றிக்கொண்டு வந்த போது வழிமறித்த 50 பசு பாதுகாப்பு பயங்கரவாதிகள், தமிழக கால்நடைத் துறை அதிகாரிகளை தாக்கியும், கற்களைக் கொண்டு லாரிகளை சேதப்படுத்தியும் உள்ளனர்.

இந்த தாக்குதல் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் மூன்று மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. தாக்குதலின் உச்சமாக லாரிகளை தீயிட்டுக் கொளுத்த முயன்ற போது தாமதமாக வந்த காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் கால்நடை மருத்துவர் என். அரவிந்த்ராஜ் மற்றும் அவரது உதவியாளர்கள் பாலமுருகன் மற்றும் கருப்பைய்யா ஆகியோர் மிக கடுமையாக காயமடைந்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் இதே ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வாரில் உரிய ஆவணங்களுடன் கரவை மாடுகள் வாங்கிச் சென்ற பால் வியாபாரி பெஹ்லு கான் இதே பசு பாதுகாப்பு பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்.

தமிழக அரசு சேவையில் என்ற அறிவிப்புடன் சென்ற வாகனங்களும் அதில் பயணம் செய்த தமிழக அரசு அலுவலர்களும் பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் இப்போது தாக்கப்பட்டுள்ளனர்.

பாஜக ஆட்சியாளர்கள் கொடுக்கும் ஊக்கத்தின் காரணமாக தான் இந்த தாக்குல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மோடியின் ஆட்சியில் சாமனியனுக்கும் பாதுகாப்பில்லை. அரசு அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதை இச்சம்பவம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

இனியும் தாமதிக்காமல், பசு பாதுகாப்பு என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுக்கும் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை தடைச் செய்ய அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டுமென்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இறைச்சிக்காக மாடுகளை விற்பதை தடுக்க மோடி அரசு பிறப்பித்துள்ள சட்டம் விவகாரத்தில் இது வரை மவுனம் காக்கும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த தாக்குதல் விஷயத்திலும் மவுனம் காக்காமல், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவர்களை தூண்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசிற்கும், ராஜஸ்தான் மாநில அரசிற்கும் உரிய அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in