Last Updated : 26 Mar, 2017 02:48 PM

 

Published : 26 Mar 2017 02:48 PM
Last Updated : 26 Mar 2017 02:48 PM

செட்டிபாளையத்தில் மீண்டும் ரயில் நிலையம் அமைக்கப்படுமா?- போராட்டம் நடத்த தயாராகும் பொதுமக்கள்

கோவை செட்டிபாளையத்தில் மீண்டும் ரயில் நிலையம் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். ரயில் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்த உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கோவையில் ஆங்கிலேயர் காலத்தில் பிரசித்திபெற்ற ரயில் நிலையமாகத் திகழ்ந்தது போத்தனூர். கோவையிலிருந்து பொள்ளாச்சி, பழநி, திண்டுக்கல், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோழிக்கோடு, சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்குச் செல்லும் பிரதான ரயில்வே நிலையமாக இது விளங்கியது.

போத்தனூரை அடுத்துள்ள பொள்ளாச்சி பெரிய சந்தை உள்ள நகரமாகும். இதனால், இடைப்பட்ட செட்டிபாளையம், கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம், கோவில்பாளையம் ரயில் நிலையங்களும் போக்குவரத்துக்கு பயனுள்ளதாக இருந்தன.

கோவை டவுன்ஹால், காந்திபுரம், வடகோவை, பீளமேடு பகுதிகளில் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் அதிகரித்த பிறகு, தற்போதுள்ள கோவை ரயில் நிலையம் முக்கியத்துவம் பெற்றது.

போத்தனூர் ரயில் நிலையத்திலிருந்து பொள்ளாச்சி, உடுமலை, பழநி, திண்டுக்கல், பாலக்காடு, எர்ணாகுளம், கோழிக்கோடு, திருவனந்தபுரம் நகரங்களுக்குச் செல்லும் ரயில்களே இயங்கின.

மேலும், கோவை சந்திப்பு முதல் சென்னை வரை அகல ரயில் பாதை மற்றும் இரட்டை ரயில் பாதைகள் அமைக்கப்பட்ட நிலையிலும், போத்தனூர்- பொள்ளாச்சி-பாலக்காடு-பழநி-திண்டுக்கல் பாதைகள் மீட்டர்கேஜ் நிலையிலேயே இருந்தன. எனவே, போத்தனூரை அடுத்து பொள்ளாச்சிக்கு இடையில் உள்ள செட்டிபாளையம், கிணத்துக்கடவு, கோவில்பாளையம், நல்லட்டிபாளையம் ரயில் நிலையங்களின் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது.

இதையடுத்து, இந்த ரயில் நிலையங்கள் படிப்படியாக மூடப்பட்டன. மேலும், கோவை சந்திப்பு முதல் சென்னை வரை அகல ரயில் பாதை மற்றும் இரட்டை ரயில் பாதைகள் அமைக்கப்பட்ட நிலையிலும், போத்தனூர்- பொள்ளாச்சி-பாலக்காடு-பழநி-திண்டுக்கல் பாதைகள் மீட்டர்கேஜ் நிலையிலேயே இருந்தன. எனவே, போத்தனூரை அடுத்து பொள்ளாச்சிக்கு இடையில் உள்ள செட்டிபாளையம், கிணத்துக்கடவு, கோவில்பாளையம், நல்லட்டிபாளையம் ரயில் நிலையங்களின் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது. இதையடுத்து, இந்த ரயில் நிலையங்கள் படிப்படியாக மூடப்பட்டன.

அகல ரயில் பாதை

கடந்த 2008-ம் ஆண்டில் பொள்ளாச்சி-திண்டுக்கல் அகல ரயில் பாதை பணிகள் நடைபெற்றதால், இந்த வழித் தடங்களில் ரயில்கள் நிறுத்தப்பட்டன. அந்தப் பணிகள் முடிந்துவிட்டன. அதேசமயம், செட்டிபாளையம், கோவில்பாளையம், நல்லட்டிபாளையம் ரயில் நிலையங்கள் மூடப்பட்ட நிலையில், கிணத்துக்கடவு ரயில் நிலையம் மட்டுமே செயல்படும் நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

போத்தனூரிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது செட்டிபாளையம். இந்த ஊருக்கும், அடுத்துள்ள கிணத்துக்கடவுக்கும் இடைப்பட்ட பகுதியில் 12-க்கும் மேற்பட்ட கல்லூரிகள், பள்ளிகள், சிறிய அளவிலான தொழிற்பேட்டை, தொழிற்சாலைகள் உள்ளன. மேலும், சுற்றுவட்டாரப் பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள், குடியிருப்புப் பகுதிகள் உள்ளன.

எனவே, செட்டிபாளையத்தில் மீண்டும் ரயில் நிலையம் அமைக்க வேண்டுமென ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ரயில் நிலையக் கட்டுமானப் பணிகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் ரூ.49 லட்சம் ஒதுக்கீடு செய்தால் ரயில் நிலையம் அமைப்பதில் தடையில்லை என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இது தொடர்பாக உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிகாரிகள், எம்.எல்.ஏ., எம்.பி.க்களிடம் கோரிக்கை விடுத்தும், இதுவரை தொகை ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

போத்தனூர்-பொள்ளாச்சி அகல ரயில் பாதையில் ரயில்கள் இயக்கப்பட உள்ள சூழலில், செட்டிபாளையம் பேரூராட்சி அலுவலகத்தை மதிமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

அவர்களைச் சமாதானப்படுத்திய அதிகாரிகள், இது தொடர்பாக உயரதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு வாரத்தில் ரயில்வே நிர்வாகத்துக்கு உரிய தொகையைச் செலுத்தி, ரயில் நிலையம் அமைக்க முயற்சிக்கிறோம் என்று வாக்குறுதி அளித்துள்ளனர்.

இதுகுறித்து செட்டிபாளையத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மருதமுத்து கூறும்போது, “இப்பகுதியில் பல்வேறு நிறுவனங்கள், கல்லூரிகள் உள்ளன. எனவே, இப்பகுதியில் ரயில் நிலையம் அமைத்தால் தொழில்கள் மேம்படும். இங்குள்ள 3 ஆயிரம் குடும்பங்களும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளன” என்றார்.

ஏற்கெனவே செட்டிபாளையத்தில் இருந்த ரயில் நிலையம் முற்றிலும் இடிக்கப்பட்டுவிட்டது. அருகில் இருந்த ரயில்வே குடியிருப்புகள் பாழடைந்து, புதர் மண்டிக் கிடக்கின்றன. அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறும்போது, “இங்கு ரயில் நிலையம் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போய்விட்டது. பாழடைந்த கட்டிடங்களில் சமூக விரோதச் செயல்கள் நடக்கின்றன. இவற்றை ரயில்வே அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. இங்கு புதிதாக ரயில் நிலையம் அமைத்தால், மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றனர்.

இதுகுறித்து மதிமுக இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன் கூறும்போது, “இந்தப் பிரச்சினைக்காக 4 ஆண்டுகளுக்கு முன்பே போராடினோம். பொள்ளாச்சி-பாலக்காடு வழித் தடத்தில் ஆனைமலைரோடு, மீனாட்சிபுரம், முதலைமடை, கொல்லங்கோடு, வடகன்னியாபுரம், புதுநகரம், பாலக்காடு டவுன் என 7 ரயில் நிலையங்கள் உள்ளன. ஆனால், போத்தனூர்-பொள்ளாச்சி வழித்தடத்தில் கிணத்துக்கடவில் மட்டுமே ரயில் நிலையத்தை அமைப்பது, இப்பகுதி மக்களை பாலக்காடு ரயில்வே அதிகாரிகள் வஞ்சிப்பதாகும். இதுகுறித்து நாங்கள் விளக்கியதால், செட்டிபாளையத்தில் மட்டும் ரயில் நிலையம் அமைக்க அனுமதி வழங்கினர்.

எனினும், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.49.50 லட்சம் செலுத்த வேண்டுமெனத் தெரிவித்தனர். இது தொடர்பாக எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் பலமுறை வலியுறுத்தியும், இதுவரை தொகை ஒதுக்கப்படவில்லை. எனவே, போராட்டம் நடத்தியுள்ளோம். ஒரு வாரத்தில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீர்வுகாணப்படாவிட்டால் மீண்டும் போராட்டங்கள் நடத்துவோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x