Last Updated : 05 Mar, 2014 12:00 AM

 

Published : 05 Mar 2014 12:00 AM
Last Updated : 05 Mar 2014 12:00 AM

தேர்தல் கூட்டணி இல்லாதபோதும் பா.ஜ.க-வை எதிர்க்காத அதிமுக

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸைக் கடுமையாக தாக்குகிறார். ஆனால், பாஜக-வை சாடுவதில்லை. இதன் மூலம், தேர்தலுக்குப் பிறகு பாஜக-வை அதிமுக ஆதரிக்கும் என்ற கருத்து வலுப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நரேந்திர மோடி குஜராத் முதல்வராக பதவியேற்றபோது இவர் நேரில் வாழ்த்தினார். பாஜக-வின் தேர்தல் பிரச்சாரக் குழு தலைவராக மோடி அறிவிக்கப்பட்டபோதும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த ஜெயலலிதா, பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டபோது வாழ்த்து தெரிவிக்கவில்லை.

தேர்தலில் மோடி வென்றால்….

முன்னதாக, ஒரு பேட்டியில் ஜெயலலிதா, “நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் தேர்தலில் வென்றாலோ, அவரது கட்சிக்குள் பதவி உயர்வு பெற்றாலோ, நான் மகிழ்ச்சியடைவேன்” என்று கூறியிருந்தார். குஜராத்துக்குள் மோடியின் வளர்ச்சியை ஆதரிக்கும் ஜெய லலிதா, அவரது பிரதமர் கனவை அவ்வளவாக ரசிப்பது இல்லை. அதிமுக பொதுக்குழுவில், ஜெய லலிதா பிரதமராக வரவேண்டும் என தீர்மானம் நிறைவேறியபோது மோடிக்கு வாழ்த்து கூறாததன் நோக்கம் இன்னும் தெளிவானது.

இதற்கிடையே, காங்கிரஸ், பாஜக அல்லாத அணியை ஆதரிக் கிறோம் என்ற முழக்கத்தை முன் வைத்து, அதிமுக கூட்டணியில் தாங்கள் நீடிப்பதை கம்யூனிஸ்ட்கள் உறுதிபடுத்தியபோது, பாஜக-வுக்கும், அதிமுக-வுக்கும் தேர்தல் கூட்டணி இருக்காது என்பது உறுதியானது. அதிமுக தேர்தல் அறிக்கையிலும், ஜெயலலிதா பிரதமராவதை வலியுறுத்தும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிமுக தேர்தல் பிரச்சாரப் பாடலிலும் `புரட்சித் தலைவி பிரதமராவது காலத்தின் கட்டாயம்’ என்று முழங்குவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், திங்களன்று காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய ஜெயலலிதா, காங்கிரஸையும், திமுக-வையும் ஒரு பிடி பிடித்தார். பாஜக-வை பற்றி ஒரு வார்த்தை கூட விமர்சிக்கவில்லை. இதனால், தேர்தலுக்குப் பிறகு, பாஜக- அதிமுக கைகோர்க்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

பாஜக-வை ஜெயலலிதா தாக்கிப் பேசாதது குறித்து அரசியல் விமர்சகர் ஞானியை கேட்டபோது, “மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸை எதிர்த்துத்தான் ஜெயலலிதா பிரச்சாரம் செய்வார். மோடிக்கு ஓட்டு போடாதீர்கள் என்று பிரச்சாரம் செய்ய முடியாது. மோடிக்கும் ஜெயலலிதாவை விமர்சிக்கத் தேவை எழாது. எனவே இனி வரும் பிரச்சாரக் கூட்டங்களிலும் ஜெயலலிதா பாஜக-வை தாக்க மாட்டார்.” என்றார்.

காணாமல் போன கம்யூனிஸ்ட்கள்

காஞ்சிபுரத்தில் தனது முதல் நாள் பிரச்சாரத்தில், ``அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்களியுங்கள்” என்று பேசினார் ஜெயலலிதா. அதேசமயத்தில், அக்கூட்டத்தை கம்யூனிஸ்ட்கள் புறக்கணித்ததும் அதிமுக-வின் கவனத்துக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, மறுநாள் மீனம்பாக்கத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில், “அதிமுக-வுக்கு, இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்கள்” என்று மட்டுமே வலியுறுத்தினார். ஒரு இடத்தில் கூட `அதிமுக கூட்டணி வேட்பாளர்கள்’ என்ற வார்த்தைகளை அவர் உச்சரிக்கவில்லை. கம்யூனிஸ்ட்களுக்குக் கூட்டணியில் இடமில்லை என்பதற்காக இப்படிச் சொன்னாரா அல்லது தொகுதிகள் எண்ணிக்கையில் பிடிவாதமாக இருக்கும் கம்யூனிஸ்ட்களை வழிக்குக் கொண்டுவர இப்படிப் பேசினாரா என்பது இன்னும் ஓரிரு தினங்களில் தெரிந்துவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x