Published : 20 Jan 2014 02:59 PM
Last Updated : 20 Jan 2014 02:59 PM

வன நிர்வாக அமைப்புகளை வலுப்படுத்த ரூ.52.11 கோடி: முதல்வர் உத்தரவு

காடு வளர்ப்பு திட்டத்தின்படி வன நிர்வாக அமைப்புகளை வலுப்படுத்த ரூ52.11 கோடி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:

காடு செழித்திருந்தால்தான் நாடு செழித்திருக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. வனங்கள் தேசத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வனங்களை ஒட்டியுள்ள கிராமங்களில் உள்ள வனம் சார்ந்து வாழ்வோர் மற்றும் சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும். அதே சமயத்தில் தரம் குன்றிய வனங்களை அவர்களது பங்கேற்புடன் இயல்பான நிலைக்கு கொண்டு வர வேண்டும். இதற்காக கூட்டு வன நிர்வாக அடிப்படையில் தமிழ்நாடு காடு வளர்ப்புத் திட்டம் நிலை 2 என்ற திட்டம் ரூ.567.42 கோடி மதிப்பீட்டில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை கடன் உதவியுடன் முதல்வர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்டது.

இந்த திட்டம் 2012 2013-ம் ஆண்டு நிறைவடைந்தது. இந்த திட்டத்தின் செயல்பாடுகளை நிலை நிறுத்த, ஐப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை கடன் தொகையில் எஞ்சியுள்ள தொகை மற்றும் மாநில அரசின் நிதி ஆகியவற்றைப் பயன்படுத்தி 2013 2014 மற்றும் 2014 2015-ம் ஆண்டுகளில் ரூ.52.11 கோடி மதிப்பீட்டில் கூட்டு வன நிர்வாக அமைப்புகள் வலுப்படுத்தப்படும். மேலும் நிறுவன திறன் மேம்பாடு, சமுதாய சொத்துகளை மேம்படுத்துதல், நிலைத் தன்மைக் கான ஆலோசனைப் பணிகள், தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கண்காணித்தல், வன விரிவாக்க மையங்களை மேம்படுத்துதல் போன்ற பணிகளை நிறைவேற்ற ஒப்புதல் அளித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x