

‘அரசியல் அமைப்பு சாசனத்துக்கு விசுவாசமாக தமிழக அரசும், முதல்வரும் செயல்பட வேண்டும்’ என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார். ஈரோட்டில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதைத் தடுத்தல், காவிரியில் கர்நாடக அரசு அணை கட்டுவதைத் தடுத்தல், நீட் தேர் வுக்கு விலக்கு கோருதல் உள்ளிட்ட சவால்கள் புதிய அரசுக்கு காத் திருக்கிறது. மக்களவை, மாநிலங்களவை விவாதங்கள் மற்றும் கேரள சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளி பரப்பாகின்றன. ஆனால், தமிழகத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை. அவ்வாறு ஒளிபரப்பு இருந்தால் நேற்று முன்தினம் சட்டப்பேரவை பிரச்சினைகளை மக்கள் நேரடியாக தெரிந்து கொண்டிருக்க முடியும்.
சட்டப்பேரவையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ரகசிய வாக்கெடுப்பை கோரியபோது, அதனை சட்டப்பேரவைத் தலைவர் ஏன் நிராகரித்தார் என்பது புரியவில்லை. எதிர்கட்சிகள் இல்லாமல் வாக்கெடுப்பு நடத்தியது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியம் இல்லை. இந்த ஆட்சி நிலைக்குமா என்று எனக்கு தெரியாது.ஆனால், தமிழகத்தில் நிலையான ஆட்சி இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அரசியல் அமைப்பு சாசனத்துக்கு விசுவாசமாக அரசும், முதல்வரும் செயல்பட வேண்டும். யாருக்கும் பினாமியாக செயல்படக் கூடாது என்றார்.