

புதுச்சேரியில், ‘இந்திய திரைப்பட விழா-2014’ நேற்று தொடங்கியது. 31-வது ஆண்டாக நடைபெறும் இந்த விழா, புதுச்சேரி முருகா தியேட்டரில் நடைபெற்றது.
விழாவில், 2013-ம் ஆண்டின் சிறந்த தமிழ் திரைப்படமாக ‘தங்கமீன்கள்’ தேர்வு செய்யப்பட்டது. இந்த திரைப்படத்தின் இயக்குநர் ராமுக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
விழாவில், இயக்குநர் ராம் பேசும்போது, “குழந்தைகள் தினத் தில் தங்கமீன்களுக்கு விருது கிடைத்துள்ளது சந்தோஷம். திரைப்பட விழாக்களும், விருது களும்தான் நல்ல திரைப்படங் களை வளர்க்கின்றன. திரைப்படம் வெளியாகி ஓராண்டுக்கு மேலாகியும் தற்போதும் பார்க்க பலர் வந்துள்ளனர். ஒரு நல்ல படத்தின் வெற்றி நீண்ட காலம் நிலைக்கும் என்பதை உணர்வதால் எனது பொறுப்பு அதிகரித்துள்ளது” என்றார்.
முதல்வர் ரங்கசாமி பேசும்போது, “புதுச்சேரி மக்களுக்கு கலை உணர்வு அதிகம். அன்னக்கிளி திரைப்படம் வெளியானபோது பல இடங்களில் முதல் ஒரு வாரம் ஓடுவதில் சிரமம் இருந்தது. ஆனால், புதுவையில் அந்த படத்துக்கு தொடக்கம் முதலே வரவேற்பு இருந்தது. ரசிக்கும் தன்மை இருப்பதால், கலைகளை வளர்ப்பதில் ஆர்வம் அதிகம் உண்டு. பொழுதுபோக்கு அம்சம் இருந்தாலும் நல்ல கருத்துகளையும் திரைப்படங் களில் சொல்ல வேண்டும். வணிகத்துக்காக மட்டுமில்லாமல், சமூக மாற்றத்துக்காகவும் படங்களை இயக்க வேண்டும்” என்றார்.