Published : 12 Feb 2014 07:46 PM
Last Updated : 12 Feb 2014 07:46 PM

நெல்லை: தேர்தல் நேரத்தில் தலையெடுக்கும் தண்ணீர் பிரச்சினை: கைவிட்ட மழையால் கலக்கத்தில் கட்சியனர்

திருநெல்வேலி மாவட்டத்தில், அணைகளில் நீர் இருப்பு கணிசமாக குறைந்து வரும் நிலையில், தேர்தல் நேரத்தில் தண்ணீர் பிரச்சினை தலையெடுக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு இது தலைவலியாக உருவெடுக்கும்.

நெல்லைக்கு தனிச்சிறப்பு

தமிழகத்தில் வேறெந்த மாவட்டங்களுக்கும் இல்லாத பெருமையாக, திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், வடக்குபச்சையாறு, கொடுமுடியாறு, நம்பியாறு ஆகிய 11 அணைக்கட்டுகள் உள்ளன.

இந்த அணைகளின் மொத்த நீர் கொள்ளளவு 13,765.5 மில்லியன் கனஅடி. அணைகளின் நீர் இருப்பைக் கொண்டே, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாயம் நடக்கிறது. குடிநீருக்கும் இவையே ஆதாரமாக உள்ளன.

தண்ணீர் திறப்பு

இவ்விரு மாவட்டங்களிலும், தற்போது பிசானப் பருவத்தில் நெற்பயிருக்கு அணைகளில் இருந்து தண்ணீர் பகிர்மானம் செய்யப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவத்தில் 39,143 ஹெக்டேரிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரம் ஹெக்டேரிலும் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதில், 20 சதவிகிதம் அளவுக்கு தற்போது அறுவடை முடிந்துள்ளது.

கடைமடைப் பகுதிகளுக்கு என்று இரு மாவட்டங்களிலும் இன்னும் 30 நாட்களுக்கு அணைகளில் இருந்து தண்ணீர் அளித்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அப்போதுதான் பயிர்களைக் காப்பாற்ற முடியும். இதற்காக, தற்போது பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையிலிருந்து 1,154 கனஅடியும், மணிமுத்தாறு அணையிலிருந்து 90 கன அடியும் தண்ணீர் பாசனத்துக்காக திறந்து விடப்பட்டிருந்தது.

143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை 66.6 அடியாக இருந்தது. இதுபோல் 118 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 81 அடியாக இருந்தது. நாளொன்றுக்கு ஒன்றரை அடிவீதம் தண்ணீர் திறந்துவிடப்படுவதால் வரும் ஏப்ரல், மே மாதங்களில் அணைகளில் நீர் இருப்பு கவலை அளிக்கும்படியாக இருக்கும் என்று வேளாண்மைத்துறை அதிகாரிகளே தெரிவிக்கிறார்கள்.

67 அடி உச்சநீர்மட்டம் கொண்ட வடக்குப் பச்சையாறு அணை முற்றிலும் வறண்டு விட்டது. மற்ற அணைகளின் நீர்மட்டம் விவரம் (அடைப்புக்குள் உச்சநீர்மட்டம்) சேர்வலாறு- 63.4 அடி (156), கடனா- 41.6 அடி (85), ராமநதி- 34.25 அடி (84), கருப்பாநதி- 24.76 அடி (72), குண்டாறு- 23.28 அடி (36.10), அடவிநயினார்- 43 அடி (142), கொடுமுடியாறு- 2 அடி (57), நம்பியாறு- 10.89 அடி (25).

குடிநீர் பிரச்சினை

மொத்தத்தில் 3-ல் 1 பங்கு அணைகளில் நீர் இருப்பு தற்போது உள்ளது. அடுத்தமாதம் இறுதிவரை விவசாயத்துக்கு அணைகளில் இருந்து நீர் வழங்கப்பட வேண்டும். அதன்பின் ஏப்ரல், மே மாதங்களில் தண்ணீர் தேவை அதிகரிக்கும்பட்சத்தில், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக விவசாய பிரதிநிதிகள் தெரிவிக்கிறார்கள். இதனால், வரும் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினை பிரதானமாக மாறும் வாய்ப்பு இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x