

தமிழ்நாடு முற்போக்கு வழக்கறி ஞர் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை நுங்கம்பாக்கம் இளம் பெண் சுவாதி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள ராம்குமாரின் பெற்றோர் சட்ட உதவி வேண்டியதால், தமிழ் நாடு முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் செயற்குழுக் கூட்டம் பொதுச் செயலாளர் மார்க்ஸ் ரவீந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் ராம்குமாரின் வழக்கறிஞர் என்ற முறையில் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.பி.ராம்ராஜ் பங்கேற்றார்.
இதில், சுவாதி படுகொலை சம்பவத்தை நேர்மையாக விசாரித்து உண்மை குற்றவாளி களைக் கண்டுபிடிக்க சிபிஐ விசாரணை கோருவது, அப்பாவி இளைஞர் ராம்குமாரை பலிகடா வாக்கும் தமிழக போலீஸாரின் சூழ்ச்சியை முறியடிப்பது. நடந்த உண்மைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் சமூக ஆர் வலர்களைக் கொண்ட ஒரு உண்மைக் கண்டறியும் குழுவை அமைத்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பது என முடிவெடுக்கப்பட்டது.
மேலும் இக்கூட்டத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.பி.ராம்ராஜ் உடன் இணைந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வழக்கறிஞர்கள் பழனிவேல், மரிய ஜான்சன், மார்க்ஸ் ரவீந்திரன், குபேந்திரன் உள்ளிட்ட 17 பேர் அடங்கிய வழக்கறிஞர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு இன்று புழல் மத்திய சிறைக்கு சென்று ராம்குமாரை சந்திக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராம்குமார் தரப்பு வழக்கறிஞரான எஸ்.பி.ராம்ராஜ் கூறும்போது, ‘‘ராம்குமாருக்கு இப்போது ஜாமீன் கோரப்போவது இல்லை. ஆனால், இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை அடையாளம் காண சிபிஐ போலீஸாரால் மட்டுமே முடியும். எனவே விரைவில் சிபிஐ விசாரணை கோரி வழக்கு தொடர வுள்ளோம்’’ என்றார்.