Published : 20 Mar 2017 09:42 AM
Last Updated : 20 Mar 2017 09:42 AM

கடின உழைப்பும், முயற்சியும் ஐஏஎஸ் கனவை நனவாக்கும்: சேலத்தில் நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் அறிவுரை

கடின உழைப்பும், முயற்சியும் ஐஏஎஸ் கனவை நனவாக்கும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் பேசினார்.

‘தி இந்து’ நாளிதழ், ‘கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி’ ஆகியன இணைந்து நடத்திய ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டி நிகழ்ச்சி, சேலம் ஏவிஎஸ் பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியை துணை ஆட்சியர் மேகநாத ரெட்டி, மாநகர காவல் துணை ஆணையர் ஜோர்ஜி ஜார்ஜ், ரயில்வே வட்டார அலுவலர் வாசுதேவன், கிங்மேக்கர்ஸ் அகாடமி தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பேராசிரியர் சத்யஸ்ரீ பூமிநாதன், மாணவி ஸ்ரீவித்யா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தனர். சேலம் ஆட்சியர் வா.சம்பத் பேசியதாவது:

தினமும் ‘தி இந்து’ நாளிதழை வாங்கி, அதில் வார்த்தைகளுக்கான அர்த்தங்களை தேடி கண்டுபிடித்து, ஆங்கில வாசிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டேன். வாசிப்பு பழக்கம் மூலம் உலக விஷயங்களை அறிந்துகொண்டு, பொது அறிவை வளர்த்துக்கொள்ள முடியும். 10-ம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வி பயின்று, சென்னை லயோலா கல்லூரியில் ஆங்கில வழியில் படித்தேன். அரசு போட்டித் தேர்வில் பலமுறை பங்கேற்று அடுத்தடுத்த தோல்வியை சந்தித்து விடா முயற்சியுடன் படித்து, நான் வெற்றி கண்டுள்ளேன். வெற்றியை நீங்களும் பெற முடியும்.



பலரும் மூன்று, நான்கு முறை ஐஏஎஸ் தேர்வில் தோல்வியை சந்தித்து, இறுதியில் வெற்றியைப் பிடித்துள்ளனர். தன்னம்பிக்கையை கைவிடாதீர்கள். கடின உழைப்பு, கடின முயற்சி உங்களுக்குள் உள்ள ஐஏஎஸ் கனவை எட்டிப் பிடிக்க கைகொடுக்கும். ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகும் உங்களுக்கு நான் ஆலோசனை சொல்ல எப்பொழுதும் தயாராகவே இருக்கிறேன். எனது அலைபேசி 94441 64000 எண் மூலம் குறுந்தகவல் அனுப்புங்கள். நானே உங்கள் அலைபேசிக்கு தொடர்புகொண்டு ஆலோசனை வழங்குகிறேன் என்றார்.

மேட்டூர் துணை ஆட்சியர் மேகநாத ரெட்டி: ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகும் உங்களுக்கு போட்டியாளர் நீங்களே; வேறொருவரும் இல்லை என்பதை உணர்ந்து படிக்க வேண்டும். இதற்காக நீங்கள் 3 முதல் 5 ஆண்டுகள் வரை தயாராக வேண்டியிருக்கும். முழு சிந்தனை, தன்னம்பிக்கை, தேவையான உழைப்பு, விடா முயற்சி மூலம் ஐஏஎஸ் தேர்வை வெற்றி கொள்ள முடியும்.

சேலம் மாநகர காவல் துணை ஆணையர் ஜோர்ஜி ஜார்ஜ்: ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறுவது கஷ்டமானதுதான். வெற்றி பெற்ற பின்னர் இந்த பணி கண்டிப்பாக பிரமிப்பாக இருக்கும். இன்னொருவருக்கு உதவி செய்வதுதான் இப்பணியில் சந்தோஷம். ஊக்கப்படுத்துதல், நம்பிக்கை என்பது உங்களுக்குள் இருந்து வரவேண்டும். தேர்வில் வெற்றி பெற்ற பலர் சாதாரண குடும்ப பின்னணியை கொண்டவர்கள்தான்.

ஈரோடு ரயில்வே வட்டார அலுவலர் எம்.வாசுதேவன்: சிவில் சர்வீஸில் மொத்தம் 24 பணி பிரிவுகள் உள்ளன. அதில் ஒன்றுதான் ஐஆர்டிஎஸ் பணியாகும். உலக அளவில் அதிக கஷ்டமான தேர்வில், சிவில் சர்வீஸ் தேர்வு 3-ம் இடத்தில் உள்ளது. இதில், எழுத்துத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என 3 கட்டங்கள் உள்ளன. உங்களுக்கு நன்கு தெரிந்த பாடங்களை தேர்வு செய்துகொள்ள வேண்டும். ஏதாவது ஒரு புத்தகத்தை பின்பற்றி படிக்க வேண்டும். தமிழ் இலக்கியம் எடுத்து படித்துதான் நான் வெற்றி பெற்றேன்.

தேர்வுக்கு தயார் செய்பவர்கள் ‘தி இந்து’ நாளிதழை நன்கு வாசிக்க வேண்டும். டெல்லியில் தேர்வு எழுதுவோர் சென்னையில் இருந்து ‘தி இந்து’வை வரவழைத்து படிப்பர்.

நிகழ்ச்சியில், கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பேராசிரியர் சத்யஸ்ரீ பூமிநாதன் ஐஏஎஸ் தேர்வுக்கு எவ்வாறு விண்ணப்பிக்க முடியும், தேர்வின் நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கலந்துரையாடல் மூலமாக மாணவர்களுக்கு விளக்கினார். ஐபிஎஸ் தேர்வானவர்களுக்கு ஹைதராபாத் சர்தார் வல்லபாய் படேல் நேஷனல் போலீஸ் அகாடமியில் அளிக்கப்படும் பயிற்சி குறித்த வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது.



சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் அனைவருக்கும் தேர்வு மாதிரி வினாத்தாள், பாடத்திட்ட கையேடு, பேனா உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டன. மதிய உணவும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை ஏவிஎஸ் பொறியியல் கல்லூரி பேராசிரியர் ஜெகதீசன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.

நிகழ்ச்சி குறித்து மாணவ, மாணவிகள் கூறியதாவது:

பழனிகுமார்: 32 வயதாகும் நான் ஐஏஎஸ் தேர்வு எழுத முடியுமா என்பது தெரியாமல் இருந்தது. துணை ஆட்சியர் மேகநாத ரெட்டி பேச்சின் மூலம் பொதுப் பிரிவுவுக்கு 32 வயதும், ஓபிசி பிரிவுக்கு 35 வயதும், எஸ்சி, எஸ்டி பிரிவில் 37 வயது உடையவர்கள் ஐஏஎஸ் தேர்வு எழுத முடியும் என்ற தகவலை பெற்றேன்.

சஹானா: ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராவது குறித்து புதிய விஷயங்களை கற்றுக்கொண்டோம். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகள் பகிர்ந்துகொண்ட அனுபவங்கள் எங்களுக்குள் உத்வேகத்தை அதிகரித்து, மனதுக்குள் ஊக்கம் பிறந்துள்ளது.

பிரியங்கா: மிகவும் பயனுள்ள நல்ல பல கருத்துகள், ஆலோசனை, வழிகாட்டுதல், உற்சாகத்தை இந்நிகழ்ச்சி மூலம் பெற்றுள்ளோம். பல சந்தேகங்களுக்கு தீர்வு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

எஸ்.எம்.சிவா: பயோ டெக்னாலஜி படித்துள்ள நான் ஐஎஃப்எஸ் தேர்வு எழுத முடியுமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு ஈரோடு ரயில்வே வட்டார அலுவலர் எம்.வாசுதேவன் பதில் அளித்து பேசும்போது, “ஐஎஃப்எஸ் தேர்வு எழுதுவதற்கு உரிய பாடங்கள் பட்டியல் இடப்பட்டுள்ளன. அந்தப் பாடப்பிரிவை எடுத்து படித்திருந்தால் தேர்வு எழுத முடியும்” என்றார்.

டெல்லியை நமதாக்குவோம்

‘தி இந்து’ நடுப்பக்க ஆசிரியர் சமஸ் பேசியதாவது:

இந்த நிகழ்ச்சி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி. இதுகுறித்து தலையங்கம் வந்த உடனேயே ‘தி இந்து’ முயற்சியைப் பாராட்டி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் மூத்த கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன். அதில் அவர் சரியாக இதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டிருந்தார். பஞ்சாப் அன்றைய முதல்வர் பிரதாப் சிங் கைரோனை நினைவு கூறியிருந்தார். பஞ்சாப் மாநிலத்தை மேம்படுத்தும் வகையில் மாநில அரசு திட்டமிட்ட பல முன்மொழிவுகளை, மத்திய அரசு தொடர்ந்து நிராகரித்து வந்தது.

பஞ்சாப் மாநில உரிமை சம்பந்தப்பட்ட பல விஷயங்கள் மத்திய அரசால் அப்போது புறக்கணிக்கப்பட்டன. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்த கைரோன் முன்னெடுத்த இயக்கம்தான் ‘டெல்லியைக் கைப்பற்றுவோம்’ என்பது. அதன்படி டெல்லியில் முடிவு எடுக்கும் இடத்தில் பஞ்சாபியர்கள் அதிகமான அளவில் இடம் பிடிக்க வேண்டும் என அவர் முடிவு செய்தார். ஏராளமான இளைஞர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் குடிமைப்பணி தேர்வு எழுத அவருடைய அரசு, கல்லூரிகளில் ஊக்க நடவடிக்கை எடுத்தது.

அதன் பலனாக நிறைய பஞ்சாபியர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆனார்கள். இது நமக்கு உதாரணம். கடந்த 40 ஆண்டில் இந்திய ஆட்சிப் பணிக்கு தேர்தெடுக்கப்பட்ட 57 சதவீதம் பேர் இந்தியை தாய்மொழியாகக் கொண்டவர்கள். முன்பு தமிழர்களுக்கு இருந்த செல்வாக்கு, இன்று அங்கு இல்லை. இந்நிலையை மாற்ற வேண்டும் என்பதால், இப்படி ஒரு நிகழ்ச்சியை ‘தி இந்து’ நடத்துகிறது. டெல்லியை நமதாக்குவோம் என்றார்.

சேலத்தில் நடைபெற்ற வழிகாட்டி நிகழ்ச்சியில் திரளாகக் கலந்துகொண்ட மாணவ, மாணவிகள்.

படங்கள் எஸ்.குரு பிரசாத்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x