

அப்துல் கலாம் பெயரில் அரசியல் கட்சி நடத்தத் தடை விதிக்க இயலாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் அண்ணன் ஏ.பி.ஜே.முகமது முத்துமீரான் மரைக் காயர் உயர் நீதிமன்றத்தில் அண்மை யில் தாக்கல் செய்த மனுவில், “அப்துல் கலாமுக்கு அரசியலில் நாட்டம் ஒருபோதும் இருந்ததில்லை. இந்நிலையில், அவரது உதவியாளராக இருந்த பொன்ராஜ், அப்துல் கலாம் விஷன் இந்தியா என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். அக்கட்சிக் கொடியில் அப்துல் கலாம் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அப்துல் கலாம் பெயரில் அரசியல் கட்சி நடத்தவும், கலாம் புகைப்படத்தை அரசியல் நோக்கத்துக்காகப் பயன்படுத்தவும் தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.
உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.விமலா இவ்வழக்கை விசாரித்து, அப்துல் கலாம் விஷன் இந்தியா என்ற அரசியல் கட்சிக்கும், கலாம் புகைப்படம் பயன்படுத்துவதற்கும் தடை விதித்து உத்தரவிட்டார். இத்தடையை நீக்கக் கோரி பொன்ராஜ் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்க முடியாது. அப்துல் கலாம் விஷன் இந்தியா என்ற அரசியல் கட்சி இதுவரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படவில்லை. அதனால் அப்துல் கலாம் பெயரில் கட்சி நடத்தத் தடை விதிக்கப்படுகிறது. அதேநேரத்தில் கலாம் பெயர் மற்றும் அவரது படத்தை சுயேட்சை வேட்பாளர் என்ற முறையில் பொன்ராஜ் உள்ளிட்டோர் பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இவ்வழக்கு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் நிரஞ்சன் ராஜகோபால் ஆஜராகி, அப்துல் கலாமின் சகோதரருக்கு அவரது கோரிக்கை தொடர்பாக விரைவு தபால் அனுப்பப்பட்டுள்ளது என்று அந்த கடிதத்தின் நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன் விவரம்:
அப்துல் கலாம் விஷன் இந்தியா என்ற கட்சியைப் பதிவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதினீர்கள். பொதுவாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்த கட்சியின் பெயரை பிரதிபலிக்கும் வகையிலோ அல்லது அந்த பெயரை வேறொரு மொழியில் மொழி மாற்றம் செய்திருந்தாலோ அக்கட்சியை பதிவு செய்ய அனுமதிப்பதில்லை. அதுபோல ஜாதி, மதம், இனம் அடிப்படையில் கட்சி தொடங்கினால் அக்கட்சியும் பதிவு செய்ய அனுமதிக் கப்படுவதில்லை. அதே நேரத்தில் தேசியத் தலைவர்களின் பெயர், புகைப் படம் உள்ளிட்டவை மீது யாரும் உரிமை கொண்டாட முடியாது. தேசியத் தலைவர்களின் கொள்கைகள், தத்து வத்தை பின்பற்றுபவர்கள் அதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் பரப்பும் நோக்கில் கட்சியையோ அல்லது இயக்கத்தையோ தொடங்குவதற்கு தடை போட முடியாது.
அப்துல் கலாம் விஷன் இந்தியா என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்குவதற்கு தடை விதிக்க முடியாது. இப்பெயரில் கட்சி நடத்த பொன்ராஜ் உள்ளிட்டோரை தடுக்கவும் இயலாது என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், இக்கடிதத்தைப் படித்துப் பார்த்த பிறகு வழக்கு விசாரணையை ஆகஸ்டு 2-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.