

தமிழகத்தில் முதல் இயக்கமாக எங்கள் அணி வளரும் வகையில் மக்கள் பணி, உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம் காட்டுவோம் என முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.
இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் மீனவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காக ஜி.கே.வாசன் நேற்று மதுரை வந்தார். அவரை விமான நிலையத்தில் மதுரை மற்றும் தென் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் வரவேற்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: நேர்மை, எளிமை, கடும் உழைப்பு என மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் புதிய இயக்கத்தின் தலைவர்கள், தொண்டர்கள் செயல்படுவர். மக்களோடு மக்களாக இருந்து அவர்களது பிரச்சினைகளை தீர்க்கப் பாடுபடுவோம். பலதரப்பு மக்களி டமிருந்தும் எங்கள் புதிய இயக்கம் குறித்து எதிர்பார்ப்பும், வரவேற்பும் அதிகமாக உள்ளது. இளைஞர்கள், மாணவர்கள் உட்பட பலரையும் உறுப்பினர்களாக சேர்ப்போம்.
ஒரு வாரத்தில் கட்சியின் பெயர்
இன்றைய சூழலில் தமிழகத்தில் முதல் இயக்கமாக எங்கள் அணி மாறும். ஒரு வாரத்தில் கட்சியின் பெயர் அறிவிக்கப்படும். இம்மாத இறுதிக்குள் திருச்சியில் மாநாடு போல் பொதுக்கூட்டம் நடைபெறும்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிரானது. இதை மாற்ற, சட்டத்திருத்தம் செய்வது குறித்தும் சிந்திக்க வேண்டும். சிறுபான்மையினர், பெரும்பான் மையினருக்கு பாலமாக இருப்பேன் என அறிவித்த பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினையில் மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. சிறிய பிரச்சினைகளைகூட மக்கள் ஏற்கவில்லை. கொலை, கொள்ளை என குற்ற சம்பவங்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்’ என்றார்.
புதிய பாதை, புதிய சிந்தனை
ராமேசுவரம் செல்லும் வழியில் சிவகங்கை மாவட்டம், திருப்பு வனத்தில் அவரது ஆதரவாளர்கள் ஜி.கே.வாசனுக்கு வரவேற்பு அளித்தனர். வரவேற்பை ஏற்றுக் கொண்டு அவர் பேசியது: புதிய இயக்கம், புதிய பாதை, புதிய சிந்தனை, புதிய கோணம் என மக்கள் விரும்பும் வழியிலே அதை வெற்றிப்பாதையாக மாற்றி காமராஜர் ஆட்சி என்ற இலக்கை அடைவோம். தமிழக மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையிலே புதிய கட்சியை நாம் அறிவித்துள்ளோம்.
பாஜக மீது குற்றச்சாட்டு
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த தைவிட, மீனவர்கள் பிரச்சினை பல மடங்கு மோசமான நிலைக்கு சென்றதற்கு மத்திய பாஜக அரசின் மெத்தனமே காரணம். தூங்குவதுபோல நடிப்பவர்களை எழுப்ப முடியாது.
எனவே, மத்திய அரசு இனி மேலாவது மீனவர் பிரச்சினையில் விழித்துக் கொள்ள வேண்டும். வெளியுறவுத் துறை உயர் அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்பி அப்பாவி தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
தமிழக கட்சிகள் அனைத்தும் ஒன்றி ணைந்து போராடினால்தான் மீனவர் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும். கச்சத்தீவை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் வாசன்.
வாசனைக் கண்டித்து முழக்கம்
தமிழக மீனவர்கள் 5 பேருக்கு இலங்கை உயர் நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி, தங்கச்சிமடத்தில் மீனவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை ஜி.கே. வாசன் சந்தித்து ஆதரவு தெரிவித்து, பாதிக்கப்பட்ட 5 மீனவர்களின் குழந்தைகளின் கல்வி உதவிக்காக ரூ. 1 லட்சம் நிவாரண உதவி அளித்தார்.
ஜி.கே. வாசனுடன் ராமநாதபுரம் முன்னாள் எம்எல்ஏவும், ராஜபக்சவின் நண்பராக அறியப்பட்டவருமான ஹசன் அலியும் உடனிருந்ததால் மீனவர்கள் மத்தியில் சலசலப்பு நிலவியது. இதைக் கண்டித்தும், மத்திய அமைச்சராக இருந்தபோது மீனவர்களை சந்திக்க வாசன் வராததைக் கண்டித்தும், அவருக்கு எதிராக மீனவப் பெண்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்னர் அவர்களை மீனவப் பிரதிநிதிகள் சமாதானப்படுத்தினர்.