மின்வாரியப் பணிக்கான நேர்காணலில் முறைகேட்டை தடுக்க போராட்டம்: ராமதாஸ் எச்சரிக்கை

மின்வாரியப் பணிக்கான நேர்காணலில் முறைகேட்டை தடுக்க போராட்டம்: ராமதாஸ் எச்சரிக்கை
Updated on
2 min read

மின்வாரிய உதவிப் பொறியாளர் நியமனத்தில் ஊழலும், முறைகேடுகளும் நடப்பதைத் தடுக்கும் வகையில் அறப்போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு உதவிப் பொறியாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல்கள் சென்னை அரும்பாக்கத்தில் தனியார் நட்சத்திர விடுதியில் நாளை மறுநாள் முதல் நடைபெறுவதை சுட்டிக்காட்டி, ஊழலுக்கு வழி வகுக்கும் இந்த முறையை ரத்து செய்யும்படி வலியுறுத்தியிருந்தேன். ஆனால், அதற்கு மாறாக இன்னும் கூடுதல் மோசடியை செய்யும் முயற்சியில் மின்வாரியம் இறங்கியுள்ளது.

தமிழ்நாடு மின்வாரியம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாலும், தனியார் விடுதிகளில் நேர்காணல்களை நடத்தும்போது முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருப்பதாலும் அந்த முயற்சியை கைவிட்டு, மின்வாரிய தலைமை அலுவலகத்திலேயே நேர்காணலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.

தமிழ்நாடு மின்வாரியம் நேர்மையான அமைப்பாக இருந்திருந்தால் தனியார் நட்சத்திர விடுதியில் நேர்காணல் நடத்தும் திட்டத்தை கைவிட்டு, மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும் என்று அறிவித்திருக்க வேண்டும். ஆனால், மின் வாரியம் அவ்வாறு செய்யவில்லை. மாறாக, அரும்பாக்கம் விஜய் பார்க் நட்சத்திர விடுதியில் நடைபெற இருந்த நேர்காணலை வண்டலூர் ஜி.எஸ்.டி சாலையில் உள்ள கல்யாண் ஹோம்டெல் என்ற நட்சத்திர விடுதிக்கு மாற்றியிருக்கிறது.

பரபரப்பு மிகுந்த சென்னையின் மையப்பகுதியிலுள்ள நட்சத்திர விடுதியில் நேர்காணலை நடத்துவதை விட, புறநகர் பகுதியில் தனித்த இடத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நேர்காணலை நடத்தினால் பேரம் பேசுவதற்கு வசதியாக இருக்கும் என்பது தான் இந்த இடமாற்றத்துக்கு காரணமாக இருக்க வேண்டும் என்று நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட பலரும் குற்றம்சாட்டியுள்ளனர்.

மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கக் கூடாது என்பதாலும், அரசின் நிர்வாகச் செலவுகளை குறைக்க வேண்டும் என்பதாலும் மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்கும் கலந்தாய்வுக் கூட்டங்கள், அரசு நிகழ்ச்சிகளைக் கூட தனியார் நட்சத்திர விடுதிகளில் நடத்தக் கூடாது என்றும், அரசு அலுவலகங்களில் மட்டுமே நடத்த வேண்டும் என்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்கான அனைத்துக் கட்சிக் கூட்டங்களை நட்சத்திர விடுதிகளில் நடத்துவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவ்வாறு இருக்கும் போது, உதவிப் பொறியாளர்கள் நியமனத்திற்கான நேர்காணலை தனியார் நட்சத்திர விடுதியில் தான் நடத்துவோம் என்று மின்சாரவாரியம் பிடிவாதம் காட்டுவது ஏன்?

மின்வாரிய உதவிப் பொறியாளர்கள் நியமனத்திற்காக ஏராளமானவர்களிடம் ரூ.20 லட்சம் வரை பேரம் பேசப்பட்டிருப்பதாகவும், பணம் கொடுக்க ஒப்புக்கொண்டவர்களுக்கு எப்படியாவது வேலை வழங்கிவிட வேண்டும் என்பதற்காகவே தனியார் நட்சத்திர விடுதியில் நேர்காணல் நடத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவற்றை அவ்வளவு எளிதாக புறந்தள்ளி விட முடியாது.

எத்தனை கோணத்தில் ஆராய்ந்தாலும் தனியார் நட்சத்திர விடுதியில் நேர்காணல் நடத்துவதை நியாயப்படுத்த முடியவில்லை. மின் வாரிய தலைமை அலுவலகத்தில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்ட அறையில் நேர்காணலை நடத்துவதை விடுத்து தனியார் நட்சத்திர விடுதியில் நேர்காணலை நடத்துவதன் நோக்கம் தரகர்கள் தடையின்றி நடமாடவும், நேர்காணலுக்கு வருபவர்களிடம் அந்த இடத்திலேயே பேரம் பேசுவதற்கும் வசதி செய்தி தருவதும் என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? மின்வாரிய உதவிப் பொறியாளர்கள் நியமனத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெறப்போவதற்கு இது தான் சிறந்த ஆதாரமாகும்.

தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெறும் பொதுத்துறை நிறுவனங்களில் மின்வாரியம் முன்னணியில் உள்ளது. கடந்த காலங்களில் தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதில் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடைபெற்றுள்ளன. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது, உதவிப் பொறியாளர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடைபெறக் கூடும் என்ற குற்றச்சாட்டு நம்பும்படியாகத் தான் உள்ளது.

தமிழ்நாடு மின்வாரியம் உள்ளிட்ட அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணி நியமனங்கள் ஐயத்திற்கு அப்பாற்பட்டவையாக இருக்க வேண்டியது அவசியம். எனவே, தனியார் நட்சத்திர விடுதியில் நாளை மறுநாள் முதல் நடைபெறவுள்ள நேர்காணல்களை மின்வாரியத் தலைமை அலுவலகத்துக்கோ அல்லது அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கோ மாற்ற வேண்டும்.

அவ்வாறு செய்யத் தவறினால், மின்வாரிய உதவிப் பொறியாளர் நியமனத்தில் ஊழலும், முறைகேடுகளும் நடப்பதைத் தடுக்கும் வகையில் நேர்காணல் நடைபெறவிருக்கும் வண்டலூர் தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக மாணவர் சங்கம் சார்பில் அறப்போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கிறேன்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in