

ஜெயலலிதா சம்பாதித்த பணத்தை கொள்ளையடித்து வைத்துள்ள சசிகலா அணியினர், ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் கொடுப்பதாக அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் இ.மதுசூதனன் குற்றம்சாட்டினார்.
கொருக்குப்பேட்டை திருநாவுக்கரசு தோட்டம் 4-வது வீதியில் மதுசூதனன் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
இத்தொகுதியில் உங்களுக்கு நான் செய்த நலத்திட்டங்களை நன்கு அறிவீர்கள். அதைச் சொல் லித்தான் வாக்கு கேட்கிறேன். ஆனால், எதிரணியினர் ஜெயலலி தாவின் பணத்தை கொள்ளை யடித்து வைத்துக்கொண்டு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் தருகிறார் கள். ஒட்டு வாங்க பணம் தரு கிறார்கள் என்றால், அவர்கள் குற்ற வாளிகள் என்றுதானே அர்த்தம். மடியில் கனமில்லை என்றால் ஏன் பணம் தர வேண்டும்?
எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சிக் கும், போயஸ் தோட்டத்துக்கும் சசிகலா குடும்பத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது சசிகலா எங்கிருந்தார்? கருணாநிதி தாலி எடுத்துக் கொடுத்து கட்டிக் கொண்ட சசிகலா, எம்ஜிஆர் தொடங்கிய கட்சியில் ஆதிக்கம் செலுத்துகிறார். தேர்தல் முடிந்த பிறகு அதிமுக தொண்டர்களைத் திரட்டி, அந்தக் குடும்பத்தை போயஸ் தோட்டத்தில் இருந்து விரட்டுவதுதான் எங்களது முதல் வேலையாக இருக்கும். போயஸ் தோட்ட வீட்டை ஜெயலலிதாவின் தேவாலயமாக மாற்றுவோம்.