

வாக்களிக்க பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அப்போதுதான் தேர்தலில் பணபலம் பயன்படுத்தப்படுவதை தடுக்க முடியும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''மத்திய பாஜக அரசு 2 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. மோடி அரசின் 2 ஆண்டு சாதனைகளை தமிழகம் முழுவதும் மக்களிடம் பிரச்சாரம் செய்ய இருக்கிறோம்.
நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் அசாமில் முதல் முறையாக பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. மேற்கு வங்கம், கேரளத்தில் 14 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று பலமிக்க கட்சியாக உருவெடுத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் பெற்றதைவிட 5 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளோம். இரு திராவிட கட்சிகளின் பணபலத்தால் பாஜக சட்டப்பேரவையில் நுழைய முடியாமல் போய்விட்டது.
அதிக அளவில் பணம் விநியோகிக்கப்பட்டதாகக் கூறி அரவக்குறிச்சி, தஞ்சையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. வெற்றி பெற்றவர் மரணம் அடைந்ததால் திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக உள்ளது. இந்த 3 தொகுதிகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடைபெறும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்துள்ளார். அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் பாஜக கண்டிப்பாக போட்டியிடுவோம்.
இந்த 3 தொகுதிகளிலும் நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடைபெறுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். வாக்களிக்க பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அப்போதுதான் தேர்தலில் பணபலம் பயன்படுத்தப்படுவதை தடுக்க முடியும்'' என்று தமிழிசை கூறியுள்ளார்.