

வறட்சி பாதிப்பால் உயிரிழந்துள்ள விவசாயிகளின் மரணத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ள அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழ்நாட்டில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டு சுமார் 50 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெல், கரும்பு, வாழை, மஞ்சள், பருத்தி உள்ளிட்ட அனைத்து பயிர்களும் முற்றிலும் அழிந்துவிட்டன. தென்னை மரங்களும் கூட கருகத் தொடங்கிவிட்டன. மிகப்பெரிய பேரழிவை தமிழக விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டத்துக்கு மதிப்பளித்து, தமிழக அரசு அமைச்சர்கள் கொண்ட உயர்நிலைக் குழுக்களை அமைத்து, மாநிலம் முழுவதும் பயிர்ச் சேதங்கள் குறித்து ஆய்வு செய்வதை வரவேற்கிறோம்.
ஆனால், திருச்சி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், விவசாயம் பாதிக்கப்பட்டதால் எந்த விவசாயியும் இறக்கவில்லை என்று கூறி விவசாயிகளின் மரணத்தை கொச்சைப்படுத்தியுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.
விவசாயிகள் எதிர்ப்பு…
திருச்சி மாவட்டம் திருப்பட்டூரில் நேற்று ஆய்வுசெய்த பின், “திருச்சி மாவட்டத்தில் வறட்சியால் இதுவரை விவசாயிகள் யாரும் இறக்கவில்லை” என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார் என்பதும், உடனே அங்கிருந்த விவசாயிகள் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.