

சென்னை மாநகராட்சி தலைமையகம் செயல்படும் ரிப்பன் மாளிகை, இன்று 100 வயதை நிறைவு செய்கிறது.
இந்தியாவின் முதல் மாநகராட்சி யான மெட்ராஸ் மாநகராட்சி என்கிற, இன்றைய சென்னை மாநகராட்சி 1688-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது மாநகராட்சி அலுவலகம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை டவுன் ஹாலில் செயல்பட்டது.
பிறகு டவுன் ஹாலை அரசு எடுத்துக் கொண்டதால், 1730களில் ஜார்ஜ் டவுன் எர்ர பாலு செட்டித் தெருவுக்கு மாநகராட்சி அலுவலகம் மாற்றப்பட்டது. அந்த அலுவலகம் போதவில்லை. எனவே 1909- ம் ஆண்டு டிசம்பரில் அடிக்கல் நாட்டப்பட்டு, நான்கு ஆண்டுகள் பார்த்துப்பார்த்து, இன்றைய மாநகராட்சி தலைமை அலுவலக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
இந்தோ- சராசனிக் பாணியில், ரூ. 7.5 லட்சம் செலவில் , 132 அடி கொண்ட மைய கோபுரத்துடன், 252 அடி நீளம், 126 அடி அகலத்தில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்ட இக்கட்டிடத்துக்கு உள்ளாட்சி நிர்வாகத்தில் பல சீரமைப்புகளை செய்த லார்ட் ரிப்பனின் பெயர் சூட்டப்பட்டு, 1913- ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி திறக்கப்பட்டது.
எப்போதும் பொங்கலுக்கு வெள்ளை அடித்ததுபோல், வெள்ளை வெள்ளேரென்று , இன்றைய நவீன சென்னையின் பழம் பெருமையை தாங்கி நிற்கும் ரிப்பன் மாளிகை, இன்று நூறு வயதை நிறைவு செய்கிறது.
நூற்றாண்டு விழாவையொட்டி, தொடங்கப்பட்ட ரிப்பன் மாளிகை புனரமைப்பு பணிகள் மெதுவாக 4 ஆண்டுகளாக நடைபெற்றுவருவதால், நூற்றாண்டு விழாவை கொண்டாட முடியாமல் நிற்கிறது ரிப்பன் மாளிகை.