

நீதிமன்ற அனுமதி பெற்றபின் சட்டப்பேரவையில் ஜெயலலிதா படத்தை வைக்கலாம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சென்னை சத்திய மூர்த்தி பவனில் மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. நேருவின் படத்துக்கு கட்சியின் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
முன்னாள் பிரதமர் ஜவஹர் லால் நேரு ஒப்பற்ற தலைவர். அவரது காலத்தில் நாடு வளர்ச்சி அடைந்தது. ஆனால், இன்றைய பிரதமர் மோடி, மக்களை ஏமாற்றி வருகிறார். கொடுத்த வாக்குறுதிகளை அவர் காப்பாற்றவில்லை.
குடியரசுத் தலைவர் தேர்தலுக் காக முதல்வர் கே.பழனிசாமி யையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் இணைக்கும் பணியை செய்து வருகிறார். முன்னாள் முதல்வர்கள் படத்தை சட்டப்பேரவையில் வைப்பது மரபு. ஆனால், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர். அதனால், நீதிமன்ற அனுமதி பெற்றபின் சட்டப்பேரவையில் அவரது படத்தை வைக்கலாம்.
பல பள்ளிகளில் பிளஸ் 1 பாடம் நடத்தப்படுவதே இல்லை. பள்ளி பாடத்திட்டத்தில் செய்யப்படும் மாற்றங்கள் வரவேற்கத்தக்கது.
இவ்வாறு திருநாவுக்கரசர் தெரிவித்தார்.