

மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து வரும் 20-ம் தேதி சென்னையில் ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மத்திய பாஜக அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டு மக்கள் பெரும் துயரங்களை சந்தித்து வருகின்றனர். புழக்கத்தி லிருந்த ரூ. 15 லட்சத்து 44 ஆயிரம் கோடியில் கடந்த டிசம்பர் 30-ம் தேதி வரை ரூ. 14 லட்சத்து 97 ஆயிரம் கோடி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு விட்டதாக் கூறப்படுகிறது. வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டிய இந்திய ரிசர்வ் வங்கி மோடி அரசின் முறைகேடுகளுக்கு துணைபோகிறது.
இதனைக் கண்டித்து வரும் 20-ம் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து ராஜாஜி சாலையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகம் வரை பேரணியாகச் சென்று முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளோம்.
கடந்த 2 மாதங்களில் 100-க்கும் அதிகமான விவசாயிகள் வறட்சியால் உயிரிழந்துள்ளனர். இதனை கொச்சைப்படுத்தும் வகையில் அதிமுக அமைச்சர்கள் பேசி வருவது வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும். உயிரிழந்த விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
தமிழகத்துக்கு வறட்சி நிவாரணம் வழங்காத மத்திய பாஜக அரசின் செயல் கடும் கண்டனத்துக்குரியது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டதற்கு மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவே பொறுப்பேற்க வேண்டும். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியிருப்பது கண்டனத்துக்குரியது.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (இன்று) சத்தியமூர்த்தி பவனில் எம்.ஜி.ஆர். படத்துக்கு மரியாதை செலுத்த இருக்கிறோம்.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.