Published : 01 Jul 2016 02:22 PM
Last Updated : 01 Jul 2016 02:22 PM

கோபி அருகே எஸ்ஐ பலியான சம்பவம்: விபத்துக்கு காரணமான 2 கல்லூரி மாணவர்கள் கைது

கோபி அருகே இருசக்கர வாகனம் மோதி எஸ்ஐ பலியான சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள கொங்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாசம் (55). இவர் நம்பியூர் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். கடந்த 25-ம் தேதியன்று கோபி - அத்தாணி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கருங்கரடு என்ற இடத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலியானார்.

இதுகுறித்து கோபி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பிரகாசம் பயணித்த வாகனத்தின் மீது எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் அவர் இறந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அத்தாணி, சவண்டப்பூர், கோபி ஆகிய பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தினர்.

இதில், அத்தாணியைச் சேர்ந்த செல்வம் என்பவர் மகன் அருண்பிரணவ் (19) என்பவர் தான் விபத்தை ஏற்படுத்தியவர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

அருண் பிரணவ் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் கடந்த 25-ம் தேதி அருண்பிரணவை பார்ப்பதற்காக கோவையில் இருந்து அவருடைய கல்லூரி நண்பர்களான அப்பநாய்க்கன்பாளையத்தைச் சேர்ந்த கவுதமசித்தா (19), நரசிம்மநாய்க்கன்பாளையத்தைச் சேர்ந்த கோகுல் (19), ராமநாதபுரம் சார்லஸ் (19), பீளமேடு ஜெயசூர்யா (19), மற்றொரு கோகுல் (19), ஆதித்யா (19), மற்றொரு ஜெயசூர்யா(19), சிங்காநல்லூர் ஹரிபாலாஜி (19), கார்த்தி (19) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் அத்தாணிக்கு வந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் இருசக்கர வாகனத்தில் கோபிக்கு சென்று விட்டு மீண்டும் அத்தாணி திரும்பியபோது, கருங்கரடு அருகே அருண் பிரணவின் வாகனம், சப்- இன்ஸ்பெக்டர் பிரகாசத்தின் வாகனம் மீது மோதியுள்ளது. அதில் பிரகாசம் தடுமாறி கீழே விழுந்ததுள்ளார்.

அப்போது அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த கவுதமசித்தாவின் மோட்டார் சைக்கிள் பிரகாசம் மீது ஏறி உள்ளது. அதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பிரகாசம் பலியானது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அங்கு கூட்டம் சேரவே கல்லூரி மாணவர்கள் அங்கிருந்து தப்பியதும் விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அருண்பிரணவ் மற்றும் கவுதமசித்தா ஆகியோரை கோபி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x