ஒரே நாளில் 8 ஆயிரம் பேர் ‘லைக்’: ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு பேஸ்புக்கில் ஆதரவு

ஒரே நாளில் 8 ஆயிரம் பேர் ‘லைக்’: ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு பேஸ்புக்கில் ஆதரவு
Updated on
1 min read

கிரானைட் முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு இளைஞர்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு இருந்து வருகிறது. தற்போது, கனிமவள முறைகேடுகள் குறித்து விசாரிக்க, அவரை உயர் நீதிமன்றம் நியமித்துள்ள நிலையில், தமிழக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சகாயத்தின் நேர்மையான செயல்பாடுகளை விரும்பும் இளைஞர்கள் பலர், அவரது பெயரில் தாங்களாகவே பேஸ்புக் கணக்குகளை (I Support Sahayam, we want U sahayam IAS as CM, Sahayam IAS.. coming CM..) அண்மைக்காலமாக தொடங்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த புதிய பக்கங்களில் சகாயத்தை பற்றிய பதிவுகள் பெரும் வரவேற்பை பெறுகின்றன. ‘ஐ சப்போர்ட் சகாயம்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள பேஸ்புக் பக்கத்தில் மிகக் குறுகிய காலத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ‘லைக்’ கிடைத்துள்ளது.

இந்தப் பக்கத்தை இயக்கிவரும் மதுரையைச் சேர்ந்த 23 வயது இளம் பட்டதாரி கூறியதாவது:

கடந்த செப்டம்பர் 27-ம் தேதி இந்தக் கணக்கைத் தொடங்கி, சகாயம் தொடர்பான செய்திகளை வெளியிட்டு வருகிறேன். இதற்கு ஆதரவு பெருகி வருகிறது. குறிப்பாக, மதுரையில் கிரானைட் குவாரிகளில் ஆய்வு மேற்கொள் வார் என்றதும் ‘லைக்’குகள் குவியத் தொடங்கிவிட்டது. ஒரே நாளில் 8 ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர்.

அரசியல் பிடிக்காது என்று சகாயம் கூறிவருகிறார். ஆனால், அவரைப் போன்ற நேர்மையாளர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அவர், அரசியலுக்கு வந்தால் எங்களைப் போன்ற படித்தவர்கள், இளைஞர்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும்.

இவ்வாறு அந்த இளைஞர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in